ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனத்திற்கு நிலம் வழங்க கர்நாடகா அரசு லஞ்சம் வாங்கியிருப்பதாக கூறி அம்மாநில பாஜக தலைவர் எடியூரப்பா தலைமையில் அக்கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடகா மாநிலம் பெல்லாரியில் உள்ள 3 ஆயிரத்து 667 ஏக்கர் நிலத்தை ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனத்திற்கு வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசு லஞ்சம் வாங்கிக்கொண்டு ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனத்திற்கு நிலத்தை தாரைவார்த்துவிட்டதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
இந்தநிலையில் கர்நாடகா அரசுக்கு எதிராக 48 மணிநேர தர்ணா போராட்டத்தில் பாஜகவினர் ஈடுபட்டுள்ளனர். பெங்களூரு நகரில் உள்ள காந்தி சிலை எதிரில் கர்நாடகா மாநில பாஜக தலைவர் எடியூரப்பா தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்தில், அக்கட்சியின் எம்.பி., எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இரவிலும் போராட்டக் களத்திலேயே எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்கள் படுத்து உறங்கினர்.
இதனிடையே நாளை முதலமைச்சர் குமாரசாமியின் இல்லம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட பாஜகவினர் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.