U-19 கிரிக்கெட் போட்டிகளில் கலக்கி வரும் யஷஸ்வி ஜெய்ஸ்வால்

குடும்பத்தின் ஆதரவின்றி, மும்பை வீதிகளில் பானி பூரி விற்கும் இளைஞர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், இந்திய கிரிக்கெட் அணியின் மிக முக்கியமான வீரராக இடம்பிடித்துச் சாதனை படைத்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில், ஐசிசி Under 19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி, நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. கிரிக்கெட் உலகம் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்த அந்த ஆட்டத்தில், இந்திய அணி சார்பில் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கியவர், யஷஸ்வி ஜெய்ஸ்வால்.

அன்று அவர் ஆடிய ஆட்டத்தில், நெருப்புப் பொறி பறந்தது. ஒவ்வொரு பந்திலும் பாகிஸ்தான் அணியைக் கதறவிட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால், சதமடித்து சாதனை படைத்தார். அதில், ஜெய்ஸ்வால் எடுத்த 105 ரன்கள், இந்திய அணி10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடிக்க மிக முக்கியமான அஸ்திரமாக அமைந்தது. போட்டியில் வென்ற இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. பாகிஸ்தான் தொடரில் இருந்து வெளியேறியது. ஐ.சி.சி.யின் 19 வயகுட்பட்டோருக்கான உலகக்  கோப்பைப் போட்டியில், இந்திய அணி பெற்ற அந்த இமாலய வெற்றிக்குக் காரணமாக இருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலை ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் பாராட்டு மழையில் நனைத்தது.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் சோயப் அக்தர் தனது யூடியூப் சேனலில், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இந்திய அணியில் நல்ல எதிர்காலம் உள்ளதாகவும், எதிர்காலத்தில் அவர் மிகப்பெரிய உயரங்களைத் தொடுவார் எனவும் பாராட்டுத் தெரிவித்தார்.

எதிரணியைச் சேர்ந்த மூத்த வீரரிடம் இருந்து இப்படிப்பட்ட பாராட்டுப் பெற்றுள்ள இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், உத்திரபிரதேசத்தைச் சேர்ந்தவர். கிரிக்கெட் பயிற்சிக்காக, மும்பை வந்த அவருக்கு, குடும்பத்தின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. மும்பையில் யாருடைய ஆதரவும் இல்லாமல், சிரமப்பட்ட அவர், தன் வாழ்வாதாரத்திற்காக, பானி பூரி விற்பனை செய்தார். வாழ்வாதாரமே சிரமமாக இருந்தாலும்… ஒவ்வொரு நாளும் தடைகளாகக் கடந்தாலும், சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், அவை அத்தனையையும் கடந்து வந்தார். கிரிக்கெட் மீதான தீராத தாகம், அவரை கிரிக்கெட்டில் மட்டும் முழு கவனம் செலுத்த வைத்தது. சாதிக்க வேண்டும் என்ற அந்த எண்ணம்தான், இன்று அவரை சாதனையாளராக மாற்றியுள்ளது.

மும்பை ஆசாத் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஜெய்ஸ்வாலை, முதலில் அடையாளம் கண்டது பயிற்சியாளர் ஜூவாலா சிங். அதையடுத்து, கடந்தாண்டு நடைபெற்ற விஜய் ஹஜாரே கோப்பையில் மும்பை அணி சார்பில் விளையாட ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்புக் கிடைத்தது. கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திய ஜெய்ஸ்வால், ஜார்கண்ட் அணிக்கு எதிராக ஆடி, 154 பந்துகளில் இரட்டை சதமடித்தார். அது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகை ஜெய்ஸ்வாலின் பக்கம் திருப்பியது. இதையடுத்து, குறுகிய காலத்திலேயே Under 19 உலகக் கோப்பை தொடருக்கான, இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டார். under 19 தொடரில் இதுவரை 312 ரன்கள் எடுத்துள்ளார். under 19 தொடரில் ஜெய்ஸ்வாலின் சாதனையைக் கவனித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 2020-ஆம் ஆண்டிற்கான ஐபில் ஏலத்தில், ஜெய்ஸ்வாலை 2 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.

பானிபூரி விற்றாலும், தங்க இடமின்றி தவித்தாலும், தனது லட்சியத்தை ஜெய்ஸ்வால் ஒருநாளும் கைவிடவில்லை. லட்சியத்தை நோக்கிய ஓட்டத்தை நிறுத்தவில்லை. அதுதான் பல சிரமங்கள் வந்தாலும், சிகரத்தில் ஏற்றி வைத்துள்ளது. ஜெய்வாலின் வாழ்க்கை சொல்லும் இந்தப் பாடம், சாதனை படைக்க நினைக்கும் அனைவருக்குமானது…

Exit mobile version