3 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி!

ஐபிஎல் தொடரின் ஏழாவது லீக் போட்டியில் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களம் இறங்கிய டெல்லி அணியின் பிரித்வி ஷா மற்றும் ஷிக்கர் தவன் ஜோடி, ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இருவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.

தொடர்ந்து களமிறங்கிய ரகானே எட்டு ரன்களிலும், ஸ்டோய்னிஸ் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அணியின் கேப்டன் ரிஷப் பந்த் அறை சதம் கடந்து இருந்த நிலையில், ரன் அவுட் ஆனார். தொடர்ந்து ராஜஸ்தான் அணி பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தியதால் 20 ஓவர்களில் டெல்லி அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு147 ரன்கள் மட்டுமே சேர்த்தது. ராஜஸ்தான் அணி தரப்பில், உனட்கட் மூன்று விக்கெட்களையும், முஸ்ட்தஃபிஸுர் ரஹ்மான் இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றினர்.

148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி வீரர்களுக்கு டெல்லி பந்து வீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்தனர். ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான ஜாஸ் பட்லர் மற்றும் மனன் வோரா ஆகியோரை, கிஸ் வோக்ஸ் ஒற்றை இலக்க ரன்களில், ஆட்டமிழக்கச் செய்தார். ஒரு புறம் விக்கெட்களை பறிக்கொடுக்க தொடங்கியதால் ஆட்டம் டெல்லி அணி வசம் சென்று கொண்டிருந்தது.

பின்னர் களம் இறங்கிய டெவிட் மில்லர் அதிரடியாக விளையாட்டி அணியை சரிவில் இருந்து மீட்டார். அவரும் 62 ரன்கள் சேர்த்து இருந்த நிலையில் அவுட்டானார். கடைசி நேரத்தில் அணிக்கு நம்பிக்கை ஊட்டிய கிறிஸ் மோரிஸ், பந்துகளை பவுண்டரி மற்றும் சிக்சர்களுக்கு விரட்டி அடித்து, அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார். இதனால் ராஜஸ்தான் அணி19 புள்ளி 4 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு150 ரன்கள் சேர்த்து த்ரில் வெற்றி பெற்றது. அணியின் வெற்றிக்கு வழி வகுத்த உனட்கடுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இன்று இரவு இதே மைதானத்தில் நடைபெறும் மற்றொரு லீக் போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதவுள்ளன. முதல் போட்டியில் தோல்வி தழுவிய சென்னை அணி வெற்றி பெறும் முனைப்பில் கடுமையாக போராடும் என்பதால் இன்றைய போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Exit mobile version