தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தமிழகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களை குழிதோண்டிப் புதைக்கும் தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவரும், கழக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மக்களின் முதுகெலும்பு வேளாண்மை என்றால், அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் உயிர் மூச்சு சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களாகும் என்று கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் சுமார் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகள், சுமார் 2 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து வருவதாக தெரிவித்துள்ளார். மாண்புமிகு அம்மா அவர்களால் 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், முதலாம் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டு சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் சார்பாக சுமார் 16 ஆயிரத்து 532 கோடி ரூபாய் மதிப்பிலான 10 ஆயிரத்து 73 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தமது தலைமையிலான அம்மா அரசு, 2019-ஆம் ஆண்டு இரண்டாம் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தி 3 லட்சத்து 501 கோடி ரூபாய் முதலீட்டில், 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டதாக சுட்டிக் காட்டியுள்ளார். தொடர்ந்து இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வெளிநாட்டு முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இதுதவிர, கொரோனா ஊரடங்கு காலத்திலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தொழில் முனைவோரை அழைத்து தாமே நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியதன் காரணமாக முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்க, அவசர கால கூடுதல் கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு, சுமார் 3 லட்சத்து 70 ஆயிரம் தொழில் நிறுவனங்களுக்கு, சுமார் 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் கொரோனா பாதிப்பிலிருந்து விரைவில் மீண்டதாக அவர் தெரிவித்துள்ளார். விடியா திமுக ஆட்சியின் இரண்டரை ஆண்டுகால இருண்ட ஆட்சியில், பொருளாதார மந்தநிலை, மூலப் பொருட்களின் விலை உயர்வு, ஆளும் கட்சியினரின் அராஜகம் என சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகள் அல்லாடிக் கொண்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். தற்போது 2ம் மின்கட்டண உயர்வு, மின்சார நிலைக் கட்டணம், பீக் ஹவர் கட்டணம், சோலார் தகடுகள் பொருத்தி அதன்மூலம் உபயோகிக்கப்படும் மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணம் போன்றவற்றால் பெரும் சரிவை சந்தித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

தாள முடியாத மின் கட்டண உயர்வால், பொருட்களின் அடக்க விலை கடுமையாக உயர்ந்துள்ளது என்றும், இந்த விலை உயர்வு மக்களின் தலையில்தான் விழுகிறது எனவும் தெரிவித்துள்ளார். இதனால், வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், இதன் காரணமாக சுமார் 25 சதவீத தொழிற்சாலைகள் மூடப்படும் அபாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், போராட்டம் நடத்திவரும் தொழில் முனைவோர் நிர்வாகிகள் கூறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். கடந்த 25ஆம் தேதி நடைபெற்ற ஒருநாள் போராட்டத்தினால், சுமார் 9 ஆயிரத்து 500 கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சுமார் 2 கோடி தொழிலாளர்கள் தங்களது ஒருநாள் சம்பளத்தை இழந்துள்ளதாகவும் தொழில் அமைப்பு நிர்வாகிகள் தெரிவிப்பதாக கூறியுள்ளார். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள் கடும் வேதனைக்கு உள்ளாகியுள்ளதாக கடுமையாக சாடியுள்ளார். இப்படிப்பட்ட சூழலில், கோவை, திருப்பூர் ஆகிய இடங்களுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்ட விடியா திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின், கடுமையான மின்கட்டண உயர்வையும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பேசாமல், எதுகை மோனையில் ‘டாலர் சிட்டி’ என்று அழைக்கப்பட்ட ‘திருப்பூர்’, ‘டல் சிட்டி’ஆக மாறிவிட்டது என்றெல்லாம் விமர்சித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

திருப்பூரை டல் சிட்டியாக மாற்றிய பெருமை பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலினையே சாரும் என்றும், அதே நேரத்தில், தன்னுடைய கையாலாகாத் தனத்தை மறைக்க யார் யார் மீதோ பழி போடுகிறார் என்று தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு, ஆளுங்கட்சியானவுடன் அதற்கு நேர்மாறான ஒரு பேச்சு என்று ஸ்டாலின் நாடகமாடுவதாகவும், அதிமுக பொதுச்செயலாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், விடியா திமுக ஆட்சியில், தொழில் முனைவோர் தங்கள் அனைத்துத் தொழில்களையும் இழந்து, தங்களை நம்பிய தொழிலாளர்களைக் காப்பாற்ற முடியாமல் வீதியில் இறங்கி போராடும் அவலம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இதற்கிடையில், தமிழக முதலமைச்சர் சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டதாகவும், ஆனால், தங்களது எந்தக் கோரிக்கையும் அரசினால் நிவர்த்தி செய்யப்படவில்லை என்றும், கடந்த 25ஆம் தேதி சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையினர் ஒருநாள் வேலை நிறுத்தத்தை நடத்தியதையும் சுட்டிக் காட்டினார். இந்த விடியா திமுக அரசு இன்னும் தூக்கத்திலிருந்து விழிக்காமல், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையினரை குழிதோண்டிப் புதைக்கும் நோக்கிலேயே தொடர்ந்து செயல்பட்டு வருவதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எனவே, உடனடியாக மின்கட்டண உயர்வை திரும்பப் பெற்று, தமிழகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை மீண்டும் உச்சம்பெறத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு விடியா திமுக அரசை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version