இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!

பாஜகவுடனான தேசிய ஜனநாயககூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதால், அதிமுக தொண்டர்களுக்கு எந்தளவுக்கு ஆனந்தமோ, அதை விட ஒரு படி மேலாக பதற்றத்தில் இருக்கிறது பாஜக… துக்கத்தில் இருக்கிறது திமுக.. எப்படி இப்படி சொல்கிறீர்கள்? என்று கேட்கிறீர்களா? கூட்டணி முறிவு பற்றி பாஜக தலைவர்களிடம் கேட்டபோது, “ஐயையோ ஆள விடுங்கடா சாமி” என்று தெறித்துவிட்டார்களே அதிலிருந்து புரிந்துகொள்ள வேண்டாமா? “எங்கள் தேசிய தலைமை முடிவு செய்யும்” என்று மழுப்பியதில் இருந்து புரிந்துகொள்ள வேண்டாமா? சரி அதுபோகட்டும், மறைந்த புரட்சித்தலைவியை, பேரறிஞர் அண்ணாவை அவதூறு பேசிவிட்டு, தவறை உணர்ந்து மன்னிப்புக்கூட கேட்காமல் கொம்புசீவி விட்ட கிடாய் போல முட்ட வந்தால், அது யாராக இருந்தாலும் சரி, கொம்பு நறுக்கப்படும் என்று குறிப்பால் உணர்த்தியிருக்கிறார் பொதுச்செயலாளர்….

ஒருபக்கம் இது என்றால், இன்னொருபுறம், அதிமுகவின் முடிவைப்பார்த்த திமுகவோ, சந்திரமுகி வீட்டுக்குள் சென்ற வடிவேலு போல, நடு நடுங்கிக்கொண்டிருக்கிறது.. இவ்வளவு நாட்களாக, அடிமை அடிமை என்று பொய் சொல்லி சால்ஜாப்பு காட்டினோமே இனி என்ன சொல்லி அதிமுகவை விமர்சிப்போம்? உண்மையான அடிமை நாம் தான் என்ற உண்மை தெரிந்துவிட்டால் என்ன செய்வது? என்று தெரியாமல், “ஐயையோ மாப்பு வச்சுட்டாங்கய்யா ஆப்பூ” என்று அஞ்சி நடுங்கிக்கொண்டிருக்கிறது.

சரி, கூட்டணி பற்றிய அதிமுகவின் முடிவைக்கண்டு பாஜக ஏன் பதறவேண்டும்? திமுக கதற வேண்டும்? என்ற கேள்வி எழுவது நியாயம்தான்.. அதற்குப்பின்னால் தான் ஒட்டுமொத்த இந்திய அரசியலுமே ஒளிந்திருக்கிறது.. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த 2வது பெரிய கட்சியான அதிமுக விலகியதை, தேசியஅளவில் அக்கூட்டணிக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவாக பார்க்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. அதுமட்டுமின்றி இனி தமிழகத்தில் பாஜகவிற்கு நோட்டாவோடு தான் போட்டியா என்றுகூட பேசிக்கொண்டிருக்கிறார்கள்… இந்தப்பக்கம் திமுகவோ, அதிமுக?பாஜக கூட்டணியை கைகாட்டி, சிறுபான்மையினர் ஓட்டுக்களை வாங்கி ஜெயித்தோம், இனி சிறுபான்மையினர் ஓட்டெல்லாம் அதிமுக அறுவடை செய்யும் என்ற பயம் ஒருபக்கம்… இன்னொருபக்கம் திமுகவின் பண்ணையார் மனோபாவத்தால் காண்டாகி இருக்கும் அதன் கூட்டணி கட்சிகள் எங்கே அதிமுகவுடன் கைகோர்த்துவிடுமோ என்று அஞ்சி நடுங்கிக்கொண்டிருக்கிறார்கள்..

ஆக, கூட்டணியை முறித்து, பாஜகவை உதறி, திமுகவை பதறவைத்த பழனிச்சாமியை இன்னமும் பழைய பழனிசாமியாகவே நினைத்து ஏமாந்துவிட்டார்களா திமுகவும்-பாஜகவும்? அரசியல் சதுரங்கத்தின் சாணக்கியராக உருவெடுத்து, புரட்சித்தலைவியின் தலைமகன் என்று தன்னை நிரூபித்து விட்ட்ட எடப்பாடி கே பழனிசாமியின் இந்த முடிவால், இனி தமிழகத்தில் ஏற்படப்போகும் மாற்றங்களை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Exit mobile version