ஐபிஎல் : பிரித்வி ஷா அதிரடி – கொல்கத்தாவை வீழ்த்திய டெல்லி

பிரித்வி ஷாவின் அதிரடி ஆட்டத்தால், கொல்கத்தா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வீழ்த்தியது.

டெல்லி, கொல்கத்தா அணிகள் மோதிய, ஐ.பி.எல். தொடரின் 25-வது லீக் ஆட்டம் அகமதாபத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் சுப்மான் கில் 43 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். நிதிஷ் ராணா 15 ரன்களிலும், ராகுல் திரிபாதி 19 ரன்களிலும் வெளியேற, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் மார்கன் டக் அவுட்டானார். இறுதியில் ரசில் 27 பந்துகளில் 45 ரன்கள் குவிக்க கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது.

155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு ஆரம்பமே அமர்க்களமாக அமைந்தது. சிவம் மவி வீசிய முதல் ஓவரில் டெல்லி அணியின் பிரித்வி ஷா தொடர்ந்து 6 பவுண்டரிகள் விளாசினார். தவானும் அதிரடியை காட்ட முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 132 ரன்கள் சேர்த்தது. தவான் 46 ரன்களுக்கும், பிரித்வி ஷா 41 பந்துகளில் 82 ரன்களும் விளாசி ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய ரிஷப் பண்ட் 16 ரன்கள் எடுக்க, டெல்லி அணி 3 விக்கெட் இழப்பிற்கு 16.3வது ஓவரிலே வெற்றி இலக்கை எட்டியது.

இதன் மூலம் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற டெல்லி அணி 10 புள்ளிகளுடன் பட்டியலில் 2வது இடத்தை பிடித்தது.பிரித்வி ஷா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Exit mobile version