ராஞ்சியின் ராஜா; கேப்டன்களின் கேப்டன் – தோனியின் பிறந்த நாள் இன்று!

இந்திய கிரிக்கெட்டின் முடிசூடா மன்னரான கேப்டன் கூல் தோனி தனது 40-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். கிரிக்கெட் உலகில் சூரியனைபோல் பிரகாசித்த தோனியின் பயணத்தை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு…

2018ம் ஆண்டு ஜூன் 29ம் தேதி அயர்லாந்து அணி உடனான டி-20 போட்டியின்போது இந்திய வீரர்கள் பேட்டிங் செய்து கொண்டிருந்தனர். வீரர்களின் கிட் பேக்கை தூக்கிவந்த நபர் தண்ணீர் பாட்டிலை எடுத்து பேட்ஸ்மேன்களிடம் கொடுத்தார். அவரை பார்த்து ஒட்டுமொத்த மைதானமும் அதிர்ச்சியில் உறைந்தது. ஆம் அந்த நபர் தோனி. உலகின் ஆகச்சிறந்த கேப்டனின் எளிமை வியக்க வைத்தது.

ஆனாலும் தோனியின் பயணம் பனி பூத்த மலர் போல மென்மையானது அல்லது. அது கரடு முரடானது.பெருங்கனவுகளுடன் அறிமுகம் ஆன முதல் போட்டி… ரன் ஏதும் அடிக்காமல் ஆட்டம் இழந்த விரக்தி… அன்று தலைகுனிந்து பெவிலியன் திரும்பிய அந்த இளைஞனுக்கு தெரியாது வருங்காலத்தில் இந்தியாவை தலைநிமிர வைக்கப்போகிறோம் என்று…

ரவிசாஸ்திரி வர்ணித்த இந்த வரிகளை கிரிக்கெட் ரசிகர்களால் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடமாட்டார்கள்.. இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் அரைநூற்றாண்டு கால ஏக்கம், கனவு, ஆசை எல்லாம் நிறைவேறிய நாள் அது.. கிரிக்கெட் உலகில் இன்று அசைக்க முடியாத அணியாக திகழ்கிறது இந்தியா… இதற்கு அடித்தளம் இட்டது கங்குலி என்றால் அதில் கோட்டை கட்டியது தோனி…

அழுத்தமான, பதற்றமான சூழலிலும் கூலாக தோனி பீல்டிங்கை செட் செய்யும் அழகே தனி.. மிடில் ஆர்டர் சொதப்பினாலும், தோனி பார்மில் இல்லாவிட்டாலும் அவர் களத்தில் இருக்கும் கடைசி நொடிவரை பதற்றத்திலேயே இருக்கும் எதிரணி…

ஹெல்மெட், கிளவுஸை கழட்டி திரும்பவும் மாட்டிய பின் தோனி அடித்த சிக்ஸர்களுக்கு கிடைத்த முத்தங்கள் எண்ணற்றவை. கூடவே அவரது விவேகமான அதேநேரம் மின்னல் வேக ஸ்டம்பிங்களும், ரன் அவுட்களும் அபாரமானவை. வங்கதேச அணிக்கு எதிராக அவர் வகுத்த கடைசி நேர வியுகத்தை இப்போது பார்த்தாலும் சிலிர்த்துப்போவார்கள் ரசிகர்கள்…

பேட்டிங்கோ, ஃபீல்டீங்கோ களத்தில் இறுதிவரை போராடும் அசாத்திய ஆற்றலின் மறுபெயர்தான் தோனி. அதனால்தான் டி-20 உலகக்கோப்பை, ஒரு நாள் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என ஐசிசியின் 3 முக்கிய தொடர்களை தன்வசமாக்கி காட்டினார் தோனி… ஒருவேளை அன்றே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இருந்திருந்தால், அதிலும் முடிசூடியிருப்பார் தோனி என்ற குரல்கள் தற்போது எழத்தவறவில்லை.

2011ம் ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி, முதல் டெஸ்டில் தோல்வியடைந்த நிலையில், 2வது போட்டியிலும் சரிவு முகம் கண்டிருந்தது. இங்கிலாந்து வீரர் இயான் பெல் சதத்தை கடந்து விளையாடி கொண்டிருந்தார். தேநீர் இடைவேளைக்கு முந்தைய கடைசி பந்தை, இயான் பெல் அடித்தபோது பவுண்டரி நோக்கி சென்றது. இந்திய வீரர் பந்தை பிடித்ததை கவனிக்காத பெல், தேநீர் இடைவேளை என பெவிலியன் நோக்கி நடைபோட ஆரம்பித்தார். அப்போது ரன் அவுட் ஆக்கப்பட்ட இயான் பெல்லை மீண்டும் விளையாட அழைத்தார் தோனி. GENTLEMAN தோனி என கிரிக்கெட் உலகம் உச்சி முகர்ந்தது.

“கேப்டன் கூல்” என அழைக்கப்பட்ட தோனிக்கு தமிழ்நாட்டு மக்கள் வைத்த செல்லப்பெயர் “தல”. ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக, தமிழ்நாட்டின் செல்லபிள்ளையானார். ஐபிஎல்-லில் மூன்று முறை சாம்பியன் பட்டம், 7 முறை இறுதிப்போட்டிக்கு தகுதி என ஒவ்வொரு வருடமும் சிஎஸ்கே ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் குதூகலிக்க வைத்தார் தோனி.

2019ம் ஆண்டு ஜூலை 9ம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியே தோனியின் கடைசி சர்வதேச போட்டியானது. முதல் போட்டியில் ரன் அவுட் ஆகி சென்றதை போலவே, கடைசி போட்டியிலும் ரன் அவுட் ஆகி வெளியேறினார் தோனி.

களத்தில் இருந்து பெவிலியன் வரை 7ம் நம்பர் ஜெர்சியை கேமிராக்கள் படம் பிடித்த கடைசி நாள் அதுதான். ஆனாலும் மஞ்சள் ஜெர்சிக்கு இன்னும் அவர் விடைகொடுக்கவில்லை. அதற்கான எண்ணம் தற்போது இல்லை என்றும் ரசிகர்களுக்கு உறுதி அளித்திருக்கிறார்…

Exit mobile version