நியூசி. அணியை வென்று இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து அணியை வென்று இங்கிலாந்து அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 41-வது லீக் ஆட்டம் ரிவர் சைட் மைதானத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேசன் ராய் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஜோ ரூட் 24 ரன்களும், தொடர்ந்து சிறப்பாக விளையாடிய பேர்ஸ்டோவ் 106 ரன்களும் எடுத்து வெளியேறினர். அவரைத்தொடர்ந்து, nரளவு ரன் சேர்த்த கேப்டன் மோர்கன் 42 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 305 ரன்கள் சேர்த்தது.

நியூசிலாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக நீஷம், ஹென்றி மற்றும் டிரென்ட் போல்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

306 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணியின் சார்பில் மார்டின் குப்தில் மற்றும் நிகோல்ஸ் ஆகியோர் களமிறங்கினர். அதில் நிகோல்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் வந்த வேகத்தில் வெளியேறினார். அவரைத்தொடர்ந்து வந்த வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். கேப்டன் கேன் வில்லியம்சன் 27 ரன்கள், ராஸ் டெய்லர் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டாம் லாதம், தனது அரை சதத்தை பதிவு செய்திருந்த நிலையில் 57 ரன்களில் வெளியேறினார்.

முடிவில் நியூசிலாந்து அணி 45 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக மார்க் வுட் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன்மூலம் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 119 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அரை இறுதிக்கு முன்னேறியது.

Exit mobile version