பாக். அணிக்கு எதிரான லீக் ஆட்டம்: ஆஸ்திரேலியா 307 ரன்கள் குவிப்பு

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான 17-வது லீக் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 308 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

12-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் 17-வது லீக் போட்டியில், ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, சர்ஃப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. டாண்டனில் நடைபெற்று வரும் போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான பந்துவீச முடிவு செய்த நிலையில், ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தொடங்கியது.

அதன்படி தொடக்க வீரராக களம் இறங்கி சிறப்பாக ஆடிய ஆரோன் ஃபின்ச் முதல் விக்கெட்டுக்கு 146 ரன்கள் சேர்த்த நிலையில், 82 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து களம் இறங்கிய ஸ்டீவன் ஸ்மித் 10 ரன்னிலும், மேக்ஸ்வெல் 20 ரன்னிலும் தங்களது விக்கெட்டை பறிகொடுக்க, மற்றொரு தொடக்க வீரர் டேவிட் வார்னர் சிறப்பாக ஆடி சதம் அடித்த நிலையில், 107 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து, களம் இறங்கிய வீரர்கள் பகிஸ்தானின் சிறப்பான பந்து வீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஆரம்பத்தில் அதிரடியாக ஆடிய இமாலய இலக்கை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த ஆஸ்திரேலியா, கடைசி கட்டத்தில் 50 ஓவரை கூட முழுமை செய்யாமல் ஏமாற்றமளித்தது. இதனால் 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா, 307 ரன்கள் மட்டுமே எடுத்தது.

308 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது.

Exit mobile version