சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “டெல்லியிலிருந்து சென்னைக்கு ரயிலில் வந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் டெல்லியை சேர்ந்தவர், அவர் ரயிலில் சென்னை வந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் நபர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். அவர் தொடர் கண்காணிப்பில் இருக்கிறார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபர் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் ஆவார். இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நபர் டெல்லியை சேர்ந்தவர் என்றும், அவருக்கு 20 வயது என்பதும் தெரியவந்துள்ளது.அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா இருப்பது உறுதியானது, இதை தொடர்ந்து அவர் ராஜூவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளார்.
அவரோடு ரயிலில் பயணம் செய்தவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணி தொடங்கியுள்ளது. விரைவில் அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும். தமிழகம் முழுவதும் 1, 89,750 பேர் தொடர் கண்காணிப்பில் இருக்கின்றனர். வடமாநிலத்திலிருந்து வரும் பயணிகள் தொடர் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டின் எல்லையோரம் உள்ள அனைத்து ரயில்நிலையங்களும் கண்காணிக்கப்படுகின்றன. ரயில் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தென்னக ரயில்வே டி.ஜி.பி யுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் 50பேர் கொண்ட குழு முழு வீச்சில் எழும்பூர், சென்ட்ரல் ஆகிய ரயில் நிலையங்களில் கொரோனா சோதனை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.கொரோனா பாதிப்பு மார்ச் 31 ஆம் தேதிக்குள் சீரடையும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ள அவர், மக்கள் பீதியடைய வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும் பேசிய அவர், “இந்நேரத்தில் மக்களுக்கு தேவைப்படும் முக கவசங்கள், சானிடைசர் மற்றும் தெர்மல் ஸ்கேனர் ஆகியவை விற்பனை விலைக்கே விற்கவேண்டும் எனவும், அதிக விலைக்கு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பூந்தமல்லி ஐ.பி.ஹச் -ல் அனுமதிக்கப்பட்டுள்ள 37 பேரும் தீவிர கண்காணிப்பில் தனிமைபடுத்தப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு கொரோனா அறிகுறி இல்லை. தமிழகத்தில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை. கொரோனா நோய்க்கான 3 அறிகுறிகள் உள்ளவர்களுக்கு மட்டும் சோதனை மேற்கொள்ளப்படுகின்றனர்.
தமிழகத்தில் வதந்தி பரப்புவோர் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.