முறையாக இறப்புச் சான்றிதழ் வழங்குக: எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அறிக்கை

கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டுகிறது என்று தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில், முறையாக இறப்புச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:

 

 “கொரோனாவால்‌ உயிரிழந்தவர்களின்‌ எண்ணிக்கை குறைத்துக்‌ காட்டப்படுவதாக தகவல்கள்‌ வந்தபோது, தமிழ்நாடு அரசு எவ்விதமான நிவாரணமும்‌ கொரோனாவால்‌ உயிரிழந்த குடும்பங்களுக்கு வழங்காத நிலையில்‌, அதைக்‌ குறைத்துக்‌ காட்ட வேண்டிய அவசியம்‌  அரசாங்கத்திற்கு இல்லை என்று கூறியிருந்தார்‌ மாண்புமிகு மக்கள்‌ நல்வாழ்வுத்‌ துறை அமைச்சர்‌ அவர்கள்‌.

மேலும்‌, ஒருவர்‌ மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்படும்போது கொரோனா உறுதி செய்யப்பட்டு, பின்னர்‌ மாரடைப்பு காரணமாகவோ அல்லது  நுரையீரல்‌ பாதிப்பு காரணமாகவோ உயிரிழந்த நிலையில்‌ அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா தொற்று இல்லை என்ற முடிவு வந்தால்‌, துவருடைய உயிரிழப்புக்‌ காரணம்‌ கொரோனா இல்லை என்று தெரிவித்திருந்தார்‌.

அதே சமயத்தில்‌, ஐ.சி.எம்‌.ஆர்‌. மருத்துவமனை ஆராய்ச்சி அதிகாரி ஒருவர்‌ கூறிய கருத்தினை நான்‌ இங்கே குறிப்பிட்டுக்‌ காட்ட விரும்புகிறேன்‌. அதாவது, ஒருவர்‌ மாரடைப்பு காரணமாக இறந்திருக்கலாம்‌. ஆனால்‌ அந்த மாரடைப்பிற்கு நுரையீரல்‌ செயலின்மை காரணமாக இருந்து, அந்த நுரையீரல்‌ செயலின்மைக்கு காரணம்‌ கொரோனா நோய்த்‌ தொற்றாக இருந்தால்‌, அந்த உயிரிழப்புக்கு காரணம்‌ கொரோனா என்றுதான்‌ பதிவு செய்யப்பட வேண்டும்‌. என்றும்‌, இதனை சிகிச்சை அளிக்கும்‌ மருத்துவர்‌ அதற்குரிய படிவத்தில்‌, குறிப்பிட வேண்டும்‌ என்றும்‌ கருத்து தெரிவித்திருக்கிறார்‌. மேலும்‌, ஒருவருக்கு கொரோனா தொற்றிற்கான சிகிச்சை மேற்கொண்டிருக்கும்போது, கொரோனா பரிசோதனை மறுபடியும்‌ மேற்கொள்ளப்பட வேண்டும்‌ என்ற பரிந்துரை தேசிய சிகிச்சை கோவிட்‌ வழிகாட்டி நெறிமுறைகளில்‌ இல்லைஎன்றும்‌ அவர்‌ தெரிவித்து இருக்கிறார்‌.

இந்தச்‌ சூழ்நிலையில்‌, கொரோனாவால்‌ உயிரிழந்தோர்‌ குடும்பத்தினருக்கு குறைந்தபட்ச உதவி கிடைக்கும்‌ வகையில்‌ புதிய வழிமுறைகளை ஆறு வாரங்களுக்குள்‌ தேசிய பேரிடர்‌ மேலாண்மை ஆணையம்‌ வகுக்க வேண்டும்‌ என்று உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம்‌, நாட்டின்‌ பொருளாதார நிலைமை உட்பட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக்‌ கொண்டு இழப்பீட்டுத்‌ தொகையை மத்திய அரசு நிர்ணயிக்கலாம்‌ என்றும்‌, இறப்பு சான்றிதழ்‌ வழங்கும்‌ நடைமுறையை எளிமையாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என்றும்‌ கூறியுள்ளது.

உச்ச நீதிமன்றத்‌ தீர்ப்பின்படி, கொரோனாவால்‌ உயிரிழந்தவர்களின்‌ குடும்பங்களுக்கு மத்திய அரசு இழப்பீட்டை அளிக்கும்‌ சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில்‌, ஐ.சி.எம்‌.ஆர்‌. வழிகாட்டி நெறிமுறைகளின்படி இறப்புச்‌ சான்றிதழ்‌ வழங்கப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்வதும்‌, கொரோனாவால்‌ உயிரிழந்த அனைத்துக்‌ குடும்பத்தினருக்கும்‌ இழப்பீடு சென்றடைவதை கண்காணிப்பதும்‌ தமிழ்நாடு அரசின்‌ கடமை.

எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ இதில்‌ உடனடியாக கவனம்‌ செலுத்தி, கொரோனாவால்‌ உயிரிழந்தவர்களின்‌ இறப்புச்‌ சான்றிதழ்களில்‌ ஏதேனும்‌ தவறு இருப்பின்‌ அதனை நிவர்த்தி செய்து பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களும்‌ நிவாரணம்‌ பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என்றும்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌. “  என்று தெரிவித்துள்ளார். 

Exit mobile version