என் வாழ்வில் இன்று மகிழ்ச்சிகரமான நாள் – நெகிழ்ந்த முதலமைச்சர்

அரசுப் பள்ளி மாணவர்களும் மருத்துவப் படிப்புப் பயிலும் வகையில், 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு வரலாற்று சிறப்பு மிக்க சட்டம் இயற்றியது. மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வுத் தொடங்கியுள்ள நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சேர்க்கை ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதற்கட்டமாக 18 மாணவர்களுக்கு சேர்க்கை ஆணையை முதலமைச்சர் வழங்கினார். அப்போது, கல்லூரி சேர்க்கை ஆணையுடன் ஸ்டெதஸ்கோப் அடங்கிய பெட்டகத்தை முதலமைச்சர் வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.

சேர்க்கை ஆணையை பெற்றுக் கொண்ட மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆனந்த கண்ணீருடன் நன்றி தெரிவித்துக் கொண்டனர். மேலும், ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்கியதாக நெகிழ்ச்சியுடன் கூறினர்.

நிகழ்ச்சியில், சேர்க்கை ஆணை பெற்ற மாணவர்களுக்கு மருத்துவ அங்கி மற்றும் ஸ்டெதஸ்கோப்பை வழங்கிய முதலமைச்சர், அவற்றை அணிய வைத்து மகிழ்ச்சியடைந்தார்.

பின்னர் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றிய இந்நாள் தம் வாழ்வில் மிக மகிழ்ச்சிகரமான நாள் எனத் தெரிவித்தார். மேலும், தமிழக வரலாற்றில் பொன்னான நாள் எனவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தமிழக அரசு பல்வேறு தடைகளைத் தாண்டி மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி, ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்கியுள்ளதாக தெரிவித்தார். இனி ஏழை மாணவர்களின் குடும்பமும் மருத்துவர் குடும்பம் என்று அழைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ஜெயக்குமார், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்துக் கொண்டனர்.

Exit mobile version