சாதி வாரியான புள்ளி விவரங்களை சேகரிக்க ஆணையம் – முதல்வர் அறிவிப்பு!

சாதி வாரியான புள்ளி விவரங்களை சேகரித்து அறிக்கை சமர்ப்பிக்க பிரத்யேக ஆணையம் அமைக்கப்படும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பினை பெற்றுத் தந்து, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றில் நீங்கா இடம் பிடித்து, சமூக நீதி காத்த வீராங்கனை என்று அனைவராலும் போற்றப்படுகின்றார் என தெரிவித்துள்ளார். இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும், சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் அனைத்து பிரிவினருக்கும் சென்றடைவதை உறுதி செய்யவும், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கிற்காகவும், சாதி வாரியான புள்ளி விவரங்கள் தேவைப்படுகின்றன என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் சாதி வாரியான புள்ளி விவரத்தை சேகரிப்பதன் மூலம் மட்டுமே முழு தகவல் கிடைக்கப் பெறும் என தெரிவித்துள்ள முதலமைச்சர், தரவுகளை சேகரித்து அறிக்கை சமர்பிப்பதற்காக பிரத்யேக ஆணையம் அமைக்கப்படும் எனவும் கூறியுள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழக அரசு, சமூக நீதியை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

 

Exit mobile version