நடப்பு ஆண்டில், வேளாண் துறை மூலம் 2.5 கோடி பனை விதைகள் நடுவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
காவிரி நதிக்கு புத்துயிர் ஊட்ட ஈஷா அறக்கட்டளை சார்பில், சென்னையில் நடைபெற்ற காவேரிக் கூக்குரல் எனும் நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 2011 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் 4 கோடியே 69 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
மரங்களால் தான் ஓசோன் படலம் பாதுகாக்கப்படுகிறது எனவும் மழை வளம் பெருகுகிறது எனவும் கூறிய முதலமைச்சர், நடப்பு ஆண்டில், வேளாண் துறை மூலம் 2 கோடியே 50 லட்சம் பனை விதைகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
அப்போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ஜக்கி வாசுதேவின் 242 கோடி மரங்கள் நடும் மாபெரும் திட்டத்திற்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என உறுதியளித்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய சத்குரு ஜக்கி வாசுதேவ், நடந்து வர வேண்டிய காவிரித்தாய், ஓடி வருவது, நம் மண்ணிற்கு நல்லதல்ல என்றும், நம் மண்ணில் வளங்கள் மழுங்கடிக்கப்பட்டதால், தண்ணீரை மண்ணிற்குள் அனுப்ப முடியவில்லை என்று கூறினார்.
Discussion about this post