டெஸ்லா கார் நிறுவனத்தை முதலமைச்சர் பார்வையிட்டார்

அமெரிக்காவில் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் முதலமைச்சர், டெஸ்லா கார் நிறுவனத்தை பார்வையிட்டார்.

உலக அளவில் பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனம் டெஸ்லா. இந்நிறுவனம், மின்சார வாகன தயாரிப்பிலும் முன்னணியில் உள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டெஸ்லா கார் நிறுவனத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். அப்போது, அமைச்சர்கள் எம்.சி. சம்பத், ஆர்.பி. உதயகுமார் மற்றும் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்பின் போது, தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத மின்சார வாகன உற்பத்திக்கு, தமிழக அரசு வழங்கி வரும் ஒத்துழைப்பு குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் டெஸ்லா அதிகாரிகளுக்கு எடுத்துரைத்தார். இதையடுத்து, தமிழகத்தில் தொழில் தொடங்க டெஸ்லா நிறுவனத்திற்கு தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. பின்னர், டெஸ்லா நிறுவன உயர் அதிகாரிகளுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நினைவுப் பரிசுகளை வழங்கினார். அதே போன்று டெஸ்லா அதிகாரிகளும் முதலமைச்சருக்கு நினைவுப்பரிசுகளை வழங்கினர்.

இதைத் தொடர்ந்து, கலிபோர்னியாவில், நவீன முறையில் மின் உற்பத்தி செய்துவரும் புளூம் எனர்ஜி நிறுவனத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். இந்நிறுவனத்தில், இயற்கை முறையில் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதாவது, பயோ கேஸ் மற்றும் ஹைட்ரஜனை எரிக்காமல், மின்சாரத்தை தயாரித்து வருகிறார்கள். அதன் ஒவ்வொரு நிலையையும் முதலமைச்சர் மற்றும் அவருடன் சென்ற அமைச்சர்கள் எம்.சி. சம்பத், ஆர்.பி. உதயகுமார், ராஜேந்திர பாலாஜி ஆகியோரும் பார்வையிட்டனர். சுத்தமான மற்றும் மலிவான விலையில் இந்நிறுவனத்தில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இத்தகைய நவீன மின்சார உற்பத்தி குறித்து முதலமைச்சருக்கு நிறுவன அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

Exit mobile version