தேனியில் டிடிவி தினகரன் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1.48 கோடி பறிமுதல்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் வாக்காளர்களுக்கு வழங்க பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக டிடிவி தினகரன் அலுவலகத்தில் இருந்து 1 கோடி 48 லட்சம் ரூபாய் பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் 37 மக்களவை தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள அமமுக அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிந்த ஒரு கோடியே 48 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சுமார் 7 மணி நேரம் சோதனை நடத்தப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாக்காளர்களுக்கு தலா 300 ரூபாய் வீதம் வழங்க திட்டமிடப்பட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. பணத்தை பறிமுதல் செய்தபோது, அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தினகரன் ஆதரவாளர்கள் தடுத்து வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து, தற்காப்புக்காக வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி அவர்களை கலைத்தனர்.

Exit mobile version