உலகக்கோப்பையில் இலங்கைக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்தின் லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க இயலாமல் அந்த அணியின் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 55 ரன்களை சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. எனினும் அதன்பின் களமிறங்கிய மேத்யூஸ், திரிமன்னே ஜோடி அணியின் ஸ்கோரை சரிவிலிருந்து மீட்டது. திரிமன்னே 53 ரன்களுக்கும் மேத்யூஸ் 113 ரன்களுக்கு அவுட் ஆகினர். இதனால் இலங்கை அணி 50 ஓவரில் 264 ரன்கள் எடுத்தது.
265 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணியின் ரோகித் சர்மாவும், கே.எல்.ராகுலும் வலுவான தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தனர். தன்னுடைய வழக்கமான பாணியில் அதிரடியை வெளிப்படுத்திய ரோகித் சர்மா சதம் அடித்தார். அணியின் ஸ்கோர் 189 ஆக இருந்த நிலையில், 103 ரன்கள் குவித்து ரோகித் சர்மா அவுட் ஆனார்.
இதையடுத்து மறுமுனையில் ஆடிய கே.எல்.ராகுல் உலகக்கோப்பையில் தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்தார். 111 ரன்கள் குவித்த அவர் மலிங்கா பந்துவீச்சில் அவுட் ஆனார். இதையடுத்து இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் அபார வெற்றி பெற்றது. விராட் கோலி 34 ரன்களுடனும், பாண்டியா 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. சதமடித்த ரோகித் சர்மா உலகக்கோப்பை தொடரில் அதிக சதமடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும் உலகக்கோப்பை தொடரில் 600 ரன்களை கடந்த 2-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
இதையடுத்து வருகின்ற ஜூலை 9 ஆம் தேதி மான்செஸ்டரில் நடைபெறும் அரையிறுதியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் 2-வது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய, இங்கிலாந்து அணிகள் பலப்பரிட்சை செய்கின்றன. இதில் வெற்றி பெறும் அணிகள் 14 ஆம் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.