நடிகர் ரஜினிகாந்த்துக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்
தாதாசாகேப் பால்கே விருது என்பது இந்தியத் திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும்.
இவ்விருது, இந்திய திரைப்படத்துறையின் தந்தை எனக்கருதப்படும் தாதாசாகேப் பால்கே அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டான 1969ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. குறிப்பிட்ட ஆண்டுக்கான விருது, அதற்கு அடுத்த ஆண்டு இறுதியில் தேசியத் திரைப்பட விருதுகளுடன் சேர்த்து வழங்கப்படுகிறது.அந்தவகையில் நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த விருது, அடுத்த ஆண்டுக்கான தேசியதிரைப்பட விருதுகளுடன் சேர்த்து வழங்கப்படும்.
நடிகர், பாடகர், இசையமைப்பாளர், இயக்குநர் என சினிமாத்துறையின் அனைத்து பிரிவினருக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது. இதற்கு முன் இயக்குநர் சத்யஜித்ரே, தயாரிப்பாளர் பி.நாகிரெட்டி, நடிகர் ராஜ் கபூர் ஆகியோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர். தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், இயக்குநர் கே.பாலச்சந்தர் ஆகியோர் இந்த விருதைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.