கலைப்பா? பெயர் மாற்றமா? ஏன் விளையாடுகிறார் ரஜினி

அரசியலுக்கு வரப்போவதில்லை என்பதை அடித்தளமாகப் போட்டுத்தான் அரசியல்கட்சிக்கான அறிவிப்புக் கோட்டையைக் கட்டினார் ரஜினி என்பது ஏறக்குறைய எல்லோருக்கும் தெரிந்தகதை.

ஆனால், தன் படங்களுக்கு மைலேஜ் ஏற்றிக்கொள்ளும் விதமாக, படப்பிடிப்பு முடிந்தகையோடு அவசரகால அறிவிப்பாக அவ்வப்போது அரசியல் என்ற வார்த்தையை ரஜினி உச்சரிப்பார், ஊடகங்கள் மற்ற வேலைகளைப் பார்த்துக்கொள்ளும் என்ற குருட்டு தைரியமும் கூட இணைந்திருக்கிறது என்பதும் இப்போது கவனிக்க வேண்டியதாகிறது. 

அரசியலுக்கு வருவேன்-வரமாட்டேன் என்ற கண்ணாமூச்சி ஆட்டத்தில், ரஜினி ஒருவழியாக முடிவெடுத்து விட்டதாக அறிவிக்கப்பட்ட கடைசி அறிவிப்பின்படி, ரஜினிக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்பதை அவரது நேரடி வாய்மொழியாகவே உறுதிசெய்யப்பட்டுவிட்டது. இதன் விளைவாக மாவட்டச் செயலாளர் கனவில் இருந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பலரும் கட்சி மாறுவதும் கண்ணீர் விடுவதுமாக காலம் கடத்தினர். இன்னும் சிலர் ரஜினி வீட்டின் முன்பு போராட்டம் நடத்தினர். ஆனால், அணுவும் அசையவில்லை. அவரும் பேசவில்லை.  

இந்நிலையில், மக்கள் மன்றம் என்று இருப்பதால்தானே அரசியலுக்கு வருவதாக நினைக்கிறார்கள் என்று நினைத்தாரோ என்னவோ, மக்கள் மன்றம் என்ற பெயரை மாற்றிவிட்டு ரஜினி ரசிகர் நற்பணி மன்றங்களாக அவை இயங்கடும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி.  

அரசியலுக்கு வரவில்லை என்ற அறிவிப்பை அழுத்தமாகக் கொடுத்தபிறகும், இந்த முடிவுக்கு மேல்முறையீடுகள் வந்துகொண்டே இருந்த நிலையில், மீண்டும் ஒருமுறை அழுத்தமாக அறிவித்து விடுவோம் என்ற முடிவுதான் இந்த அறிவிப்பு. அதுபோக, அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துவிட்டன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

Exit mobile version