உலகையே அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸால் இந்தியாவில் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று டெல்லியிலிருந்து சென்னைக்கு வந்த ஒருவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டு அவர் ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்றுவருகிறார். மேலும் அவருடன் இருந்த இளைஞர்கள் தனிமைபடுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பார்கள், மால்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை 31-ம் தேதி வரை திறக்க கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம் கொரோனாவை எதிர்த்து போராடுவதில் முழு மூச்சாக இறங்கியுள்ளது.
தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பாராட்டு தெரிவித்திருந்தார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக அரசை பாராட்டி கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு எடுத்துக்கொண்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகவும் பாராட்டத்தக்கவை. அரசோடு சேர்ந்த மக்கள் நாமும் இணைந்து இந்த கொடிய வைரஸ் பரவாமல் தடுக்க ஒத்துழைப்போம் இந்த இக்கட்டான சூழ்நிலையில் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவித்தொகை அளித்தால், அவர்களுக்கு அது பேருதவியாக இருக்கும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்” என்று தெரிவித்துள்ளார்.