இந்திய நாட்டை விட பிரதமர் நரேந்திர மோடி பெரியவர் இல்லை என்றும், அரசின் ஒவ்வொரு அமைப்பும் மோடி அரசின் சர்வாதிகார போக்கை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாகவும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
மக்களின் எதிர்ப்புக் குரலுக்கு பயந்து மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் தந்திரம் பலிக்காது என்றும் ராகுல்காந்தி கூறியுள்ளார்.
பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள அவர், விவசாயிகள் நெருக்கடியில் இருக்கும் போது பிரதமர் நரேந்திர மோடி தூங்கிக் கொண்டிருந்ததாக குற்றம்சாட்டியுள்ளார். ஏழைகளுக்கு அடிப்படை வருமானம் அளிக்கும் திட்டம் புரட்சி கரமான திட்டம் என்றும், இந்திய இளைஞர்களின் மனதை காங்கிரஸ் கட்சி புரிந்து வைத்துள்ளதாகவும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இந்த அரசு ஒவ்வொரு கூட்டாட்சி அமைப்பையும் சிதைத்து வருவதாக தெரிவித்துள்ள அவர், காங்கிரஸ் கட்சி எந்த ஒரு அமைப்பையும் சிதைக்காது என்றும் உறுதி அளித்துள்ளார். பிரியங்கா காந்தி அகில இந்திய அளவில் கட்சிப் பணியாற்றுவார் என தெரிவித்துள்ள ராகுல் காந்தி, அவரது வருகையால் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.