தொடர்ந்து 4வது முறையாக பீகார் முதலமைச்சராக பதவியேற்ற நிதிஷ் குமார்!

பீகார் முதலமைச்சராக தொடர்ந்து 4வது முறையாக நிதிஷ் குமார் பதவியேற்றுக் கொண்டார்.

பீகார் சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதிஷ் குமார் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். தலைநகர் பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடைபெற்ற பதவியேற்பு விழாவில், தொடர்ந்து 4வது முறையாக நிதிஷ் குமார் முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பாகு சவுகான் பதவி பிராமணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

69 வயதாகும் நிதிஷ் குமார் இதுவரை ஏழு முறை முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். இவரைத் தொடர்ந்து பா.ஜ.கவைச் சேர்ந்த தர்கிஷோர் பிரசாத் மற்றும் ரேணு தேவி ஆகியோர் துணை முதலமைச்சர்களாக பதவியேற்றனர். இரு துணை முதலமைச்சர்களுக்கும் ஆளுநர் பாகு சவுகான் பதவி பிராமணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து ஐக்கிய ஜனதா தளத்தில் 4 பேரும், பா.ஜ.க.-வில் இருவரும், இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா, விகாசீல் இன்சாம் கட்சியில் தலா ஒருவரும் என மொத்தம் 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். பதவியேற்பு விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதற்கிடையே, முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் செவ்வாயன்று நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து நவம்பர் 23ஆம் தேதி எம்.எல்.ஏ.-க்கள் பதவியேற்புக்காக சட்டப்பேரவை சிறப்பு அமர்வு கூடுகிறது.

இந்நிலையில், பீகார் முதலமைச்சராக நான்காவது முறையாக பதவியேற்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமாருக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். நிதிஷ் குமாரின் ஆட்சிக்காலம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துவதாக தனது ட்விட்டர் பதிவில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Exit mobile version