வேளாண் சட்ட ஆவணங்கள் குப்பைத்தொட்டியில் வீசப்படும் – ராகுல்காந்தி ஆதங்கம்!

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மூன்று வேளாண் சட்டங்களும் நீக்கப்படும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஒரு மாதத்திற்கு மேலாக பஞ்சாப் மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் 3 நாட்களுக்கு டிராக்டர் பேரணி நடத்துகிறார்.

முதல் நாளான இன்று பஞ்சாப் மாநிலம் மோகாவில் பேரணி நடைபெற்றது. பேரணியின் துவக்க நிகழ்ச்சியில் பேசிய பஞ்சாப் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங், வேளாண் சட்டங்களில், குறைந்தபட்ச ஆதரவு விலை கட்டாயம் என்று திருத்தம் செய்யப்படாத வரை மத்திய அரசு கொடுக்கும் வாக்குறுதிகளில் எந்த பயனும் இல்லை என்றார்.

தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, மூன்று வேளாண் சட்டங்களை அமல்படுத்த வேண்டிய அவசியம் என்ன வந்தது? என கேள்வி எழுப்பினார். வேளாண் சட்டங்களில் விவசாயிகளுக்கு ஆதரவு இருப்பதாகக் கூறும் பிரதமர் நரேந்திர மோடி, அதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்காதது ஏன்? என்றும் இந்த சட்டங்களால் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தால், அவர்கள் ஏன் நாடு முழுவதும் போராட வேண்டும்? என்றும் ராகுல் காந்தி வினவினார்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், மூன்று கருப்புச் சட்டங்களையும் ரத்து செய்வதோடு, வேளாண் சட்ட ஆவணங்கள் குப்பைத் தொட்டியில் வீசப்படும் என்றும் ராகுல் காந்தி உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து பாத்னி கலான் ((Badhni kalan)) ஜாத்பூரா ((Jattpura)) வரை ராகுல் காந்தி, அமிரீந்தர் சிங் உள்ளிட்டோர் டிராக்டரில் பேரணி மேற்கொண்டார்.

 

Exit mobile version