ஆந்திரப்பிரதேசத்துக்கென உருவாக்கப்பட்ட புதிய உயர் நீதிமன்றம், மாநில தலைநகர் அமராவதியில் ஜனவரி 1-ம் தேதியில் இருந்து செயல்படத் தொடங்க உள்ளதற்கான உத்தரவை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார்.
ஆந்திரத்தில் இருந்து தெலங்கானா தனிமாநிலம் பிரிக்கப்பட்ட பிறகும், இரு மாநிலங்களின் உயர் நீதிமன்றம் ஐதராபாதத்தில் இயங்கி வந்தது. இதையடுத்து, ஆந்திராவுக்கென தனி உயர் நீதிமன்றம், அமராவதி நகரில் உருவாக்கப்பட்டது. இதுதொடர்பாக, மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், நீதிபதி ரமேஷ் ரங்கநாதன் ஆந்திரப்பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர், உத்தரகண்ட் மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ளார்.
ஆந்திரப்பிரதேச உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியைத் தவிர, மேலும் 15 நீதிபதிகள் பொறுப்பில் இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய உயர் நீதிமன்றத்துடன், நாட்டின் மொத்த உயர் நீதிமன்றங்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.