ஆந்திர மாநிலத்தில் பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகள் மற்றும் வைரக் கற்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்ட பஞ்சலிங்கா சோதனை சாவடியில், காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஐதராபாத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற தனியார் பேருந்து சோதனை செய்யப்பட்டது. அதில், இரண்டு பயணிகளின் உடைமைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் வைர கற்கள் இருப்பதை போலீசார் கண்டறிந்தனர்.
உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ஒரு கோடியே 4 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகள், மற்றும் வைரக் கற்களை பறிமுதல் செய்ததோடு, தமிழகத்தை சேர்ந்த இருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர், அந்த தங்க நகைகளை வருமான வரித் துறையினரிடம் ஒப்படைத்தனர்.