இலங்கையில் இருந்து தங்கம் கடத்தல்!

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்ட எல்லையில் இருந்து கூப்பிடு தொலைவில் அமைந்துள்ள இலங்கைப் பகுதிக்கு அவ்வப்போது கடல்மார்க்கமாக கடத்தல் நடைபெறுகிறது. தமிழகப் பகுதிகளில் இருந்து மஞ்சள், எரிபொருள், உரம், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் இலங்கைக்கும், இலங்கையில் இருந்து தங்கம், சர்வதேச போதைப் பொருட்கள் தமிழகப் பகுதிக்கும் கடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இலங்கையில் இருந்து நாட்டுப்படகில் தங்கம் கடத்தி வந்ததாகவும், அதனை கடலில் தூக்கி வீசிவிட்டதாகவும் தகவல்பரவியுள்ளது.

இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வருவதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து இந்திய கடலோரக் காவல்படையினரும், மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளும் மண்டபம் கடற்பகுதியில் நடுக்கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது இலங்கையில் இருந்து மண்டபம் நோக்கி வந்த நாட்டுப் படகினை நிறுத்தச் சொல்லியும் கேட்காமல் சென்றதால் அவர்களை மடக்க முற்பட்டுள்ளனர். அப்போது நாட்டுப் படகில் இருந்து பார்சல் ஒன்றை கடலுக்குள் தூக்கி வீசியதை, அதிகாரிகள் பார்த்துள்ளனர்.

இதுதொடர்பாக நாட்டுப்படகில் இருந்தவர்களை மடக்கிப் பிடித்து விசாரித்துள்ளனர். மண்டபம் பகுதியைச் சேர்ந்த கடத்தல் புள்ளி ஒருவரின் கையாட்களான அவர்கள், பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்ததாகவும், அதிகாரிகளைக் கண்டதால் அதனை கடலில் தூக்கி வீசியதாகவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அவர்களை விசாரணை அலுவலகத்துக்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றதோடு, கடலில் வீசப்பட்ட தங்கத்தை நீர் மூழ்கி வீரர்களைக் கொண்டு தேடி வருகின்றனர்.

Exit mobile version