இந்தியாவுடனான வெளியுறவு வர்த்தகத்திற்கு பாகிஸ்தான் தடை

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக இந்தியாவுடனான அனைத்து வெளியுறவு வர்த்தகத்திற்கும் பாகிஸ்தான் தடை விதித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசின் துணிச்சலான இந்த முடிவுக்கு பல தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வரும் நிலையில், பாகிஸ்தான் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று பாகிஸ்தானில் நடைபெற்ற, தேசிய பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில் இந்தியாவுடனான அனைத்து வெளியுறவு வர்த்தகங்களுக்கும் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து ஐநா. பாதுகாப்பு கவுன்சிலிடம் முறையிடவும் பாகிஸ்தான் அரசு முடிவெடுத்துள்ளது.

பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரை உடனடியாக வெளியேற்றவும், இந்தியாவின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதியை கருப்பு தினமாக கடைபிடிக்கவும் பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.

இதனிடையே பாகிஸ்தான் தங்களின் வான்வழிப்பாதையை மூடியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால், இந்திய விமானங்கள் பாகிஸ்தானின் வான் வழிப்பாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. 

Exit mobile version