அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் 3வது சந்திப்புக்கு தயார் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார்.
வடகொரியா மீது விதித்த பொருளாதார தடைகளை முழுமையாக அமெரிக்கா திரும்பப்பெறவேண்டும் என்று அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்திருந்தார். அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடாத வரை, பொருளாதார தடைகளை திரும்பப்பெற முடியாது என்று அமெரிக்கா அறிவித்தது. இந்த விவகாரம் குறித்து பேசி, சுமுக தீர்வுகாண, டிரம்ப், கிம் ஜாங் உன் இருவரும் முடிவு செய்தனர். அதன்படி கடந்த பிப்ரவரி மாத இறுதியில் இருநாட்டு தலைவர்கள் வியட்நாமில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் எதிர்பார்த்தபடி இந்த சந்திப்பு இணக்கமாக நடைபெறததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன் 3-வது முறையாக சந்திப்பு நடைபெறலாம் என்று ஏற்கனவே டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அமெரிக்காவுடன் 3வது சந்திப்புக்கு தயார் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார்.