தமிழக மாணவர்கள் பொதுத் தேர்வுகளை சிரமமின்றி எதிர்கொள்ளும் வகையில், புதிய பாட புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடை மற்றும் பாடப் புத்தகங்களை சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிமுகப்படுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஆண்டில் 1, 6, 9, 11 பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தற்போது 2, 3, 4, 5, 7, 8, 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மூன்று ஆண்டுகளில் முடிக்கப்பட வேண்டிய இந்தப் பணி இரண்டே ஆண்டுகளில் முடிக்கப்பட்டுள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.
இந்த புதிய பாடத்திட்டத்தின் மூலம் மத்திய அரசின் தேர்வுகளை மாணவர்கள் சிரமமின்றி எதிர்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.