கரூர் மாவட்டம் கார்வழியில் நொய்யலாற்றில் கட்டப்பட்டுள்ள அணைக்கு தண்ணீர் வந்துள்ள நிலையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார்.
கரூர் மாவட்டம் அஞ்சூர் – கார்வழி இடையே நொய்யலாற்றின் குறுக்கே உள்ள அணை 1980ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டதாகும். 46 அடி உயரமுள்ள இந்த அணையில் அரை டிஎம்சி தண்ணீரை தேக்கிவைக்க முடியும். இந்த அணையில் தேக்கப்படும் நீரால் 19 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெற்றது.
இந்த அணைக்கு 1997 ஆம் ஆண்டுக்குப்பின் நீர்வரத்து குறைந்திருந்தது. இந்தநிலையில், கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் பலத்த மழை பெய்ததால் இப்போது மீண்டும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்தநிலையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் அணைக்கு வந்து ஆய்வு செய்தார். அணை முழுவதும் நிரம்பிய உடன் விவசாயத்திற்குத் தண்ணீர் திறக்கப்படும் என அவர் தெரிவித்தார்.