பரியேறும் பெருமாள் எனும் மாபெரும் வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் மாரி செல்வராஜ், தனுஷை நாயகனாக வைத்து அடுத்தாக இயக்கியுள்ள கர்ணன் திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள இத்திரைப்படம், அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்துள்ளதா என்பதை விரிவாகப் பார்க்கலாம்…
தமிழகம் இதுவரை பல கலவரங்களை கண்டிருக்கிறது. அதில் ஒரு சில கலவரங்கள் காலத்தால் மறக்க முடியாத கரும்புள்ளியாக பலரது நினைவில் துருத்திக்கொண்டிருக்கும். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வை நினைவுபடுத்தும் விதமாக வந்துள்ளது மாரி செல்வராஜின் கர்ணன்.
பொடியன்குளம் கிராமத்துக்கு என தனியாக பேருந்து வசதி கிடையாது. மெயின் ரோட்டில் செல்லும் எந்த பேருந்தும் பொடியன்குளத்தில் நிற்காது. இதனால் அந்த கிராமத்தில் வாழும் மக்கள் பேருந்துக்காக அருகில் உள்ள ஊருக்கு தான் செல்ல வேண்டும். ஆனால் அதற்கும் தடையாக நிற்கிறார்கள் அந்த ஊரில் உள்ள சாதி வெறி பிடித்தவர்கள். இதன் காரணமாக பெண் பிள்ளைகள் உயர் கல்வியை தொடர முடியாத நிலையும், இளைஞர்கள் வேலைக்காக வெளியே செல்ல முடியாத சூழலும் நிலவுகிறது. அடக்குமுறைகளுக்கு அடங்க மறுக்கும் கோபக்கார இளைஞனான கர்ணன், இந்த பிரச்சினைக்கு எப்படி தீர்வுகாண்கிறான் என்பதை ரத்தமும் சதையுமாக நெஞ்சம் பதற சொல்லியிருக்கிறார் மாரி செல்வராஜ்.
முன் கால்கள் கட்டப்பட்ட கழுதை, போக்குவரத்து வசதி இல்லாத ஒரே காரணத்தால் உயிரிழந்த சிறுமி, படம் நெடுக பூடமாக உலாவும் குறியீடு என மாரியின் டச் படம் முழுதும் தெரிகிறது. ” மாடசாமி மகனுக்கு எப்படிடா துரியோதனன்னு பேரு வந்துச்சு… பேர மாத்திட்டா நாங்க உனக்கு சல்யூட் அடிக்கணுமா.. எங்க பிரச்சினை என்னன்னு உங்களுக்கு தெரியுல.. ஆனா நாங்க நிமிர்ந்து நிற்கிறது உங்களுக்கு பிரச்சினையா இருக்குல்ல” போன்ற வசனங்கள் சாதிய ஆணவத்தின் தலையில் நங்கென கொட்டுகின்றன.
ரஜினிக்கு முன்பாக தமிழ் சினிமாவில் தாதாசாகேப் விருது பெற்றவர்கள் யார்?
அழுக்கு லுங்கி, கசங்கிய சட்டை, லேசாக வளர்ந்த தாடி மீசை, கலைந்த தலை, கண்களில் எப்போதும் சீறும் கோபம், ரஜிஷாவை பார்க்கும் போது மட்டும் கண்களில் வழியும் காதல் என வழக்கம் போலவே இந்த படத்திலும் தனது அசுரத்தனமான நடிப்பால் கர்ணனுக்கு உயிர்கொடுத்திருக்கிறார் தனுஷ். பலவீனமான திரைக்கதைக்கு தனுஷின் நடிப்பு தான் மிகப்பெரிய பலம்.
‘கண்டா வரச்சொல்லுங்க, மஞ்சனத்தி, விட்ராதீங்க யப்போ’ என சந்தோஷ் நாரயணன் இசையில் ஒலிக்கும் அத்தனை பாடல்களும் டிரெண்டிங் ரகம். பொட்டல்காடு… ஓடுகள் வேய்ந்த செம்மண் வீடுகள்.. கருவேல மரங்கள் நிறைந்த ஒற்றையடி பாதை… சுருக்கம் நிறைந்த முகங்கள் என ஒரு கிராமத்தையே நம் கண்முன் கொண்டு வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர். இருவருக்கும் ஒரு ஸ்பெஷல் சபாஷ்.
ஹீரோயின் ரஜிஷா தமிழுக்கு நல்ல அறிமுகம். வெறும் ரொமான்ஸ் செய்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் நன்றாகவே நடித்திருக்கிறார். வெறும் காமெடியனாக மட்டுமில்லாமல் பரியேறும் பெருமாள் படத்தை போலவே நல்ல கதாபாத்திரம் யோகி பாபுவுக்கு. அதை உணர்ந்து நடித்திக்கிறார். தனுஷுக்கு அடுத்ததாக படத்தை தாங்கி பிடித்திருக்கிறார் ஏமராஜா தாத்தாவாக நடித்திருக்கும் லால். கடைசியாக களத்தில் இறக்கி விட்டப்பட்டாலும், கிடைத்த பந்தையெல்லாம் சிக்சராக அடித்து ஸ்கோர் செய்கிறார் நட்டி நட்ராஜ். இவர்கள் மட்டுமல்லாமல் லட்சுமி ப்ரியா, கவுரி கிஷன், ஜி.எம்.குமார், அழகம் பெருமாள், பூ ராம், தனுஷின் பாட்டி கேரக்டரில் நடித்துள்ள மூதாட்டி என படத்தில் வரும் அனைவருமே அந்தந்த கதாபாத்திரமாகவே தெரிகிறார்கள்.
கர்ணனை புரிந்துகொள்ள வேண்டும் என்றால் இன்னமும் அரசு பேருந்துகளையே தங்கள் வாழ்வாதாரமாக நம்பியுள்ள கிராமத்து மக்களின் வாழ்வியலை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அதை உணராதவர்களிடம் இருந்து கர்ணன் வெகு தூரம் சென்றுவிடுவான்.
ஆரம்பத்தில் இருந்து படம் முழுவதும் மிக சீரியஸாக நகர்கிறது. முதல் பாதியில் இருக்கும் படபடப்பு இரண்டாம் பாதியிலும் தொடர்வதால் ஒரு கட்டத்தில் சலிப்பு ஏற்பட்டு விடுகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனாக இருக்கும் யோகி பாபு இருந்தும் கூட படம் படு சீரியஸாக நகர்வது மிகப்பெரிய மைனஸ். அதேபோல் இத்தனை சீரியஸாக படத்தை கொண்டு சென்றுவிட்டு கடைசியில் சினிமாத்தனமாக முடித்திருப்பது மிகப்பெரிய நெருடல்.
கிளாஸ் இயக்குனரான மாரி செல்வராஜ் தனுஷ் போன்ற ஒரு பெரிய ஹீரோவை வைத்து படமெடுத்திருப்பதால் கொஞ்சம் மாஸ் காட்ட முயற்சித்திருக்கிறார். அதனால் சொல்ல வந்ததை முழுமையாக சொல்ல முடியாமல் திணறியிருக்கிறார். மொத்தத்தில் ‘கர்ணன்’ பாதி மாரி… மீதி தனுஷ்.
-இராஜேந்திர பிரசாத்