சென்னை வேளச்சேரியில் மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய கணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை வேளச்சேரி நேரு நகர், பாரதிதாசன் தெருவில் கடந்த ஓராண்டாக வசித்து வருபவர்கள் ஜெயராஜ், இலக்கியா தம்பதி. இவர்கள் இருவரும் ஒன்றரை ஆண்டிற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஜெயராஜ் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இலக்கியா, வேளச்சேரியில் உள்ள ஒரு மாலில் பணி புரிந்து வந்தார். இருவரும் திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள், இலக்கியாவிற்கு உறவினர்கள் யாரும் இல்லை.
இந்நிலையில் கடந்த 30-ம் தேதி இலக்கியா சமைக்கவில்லை என்பதால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தத் தகராறில் இலக்கியாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றதுபோல் செய்து விட்டு ஜெயராஜ் கத்தியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சென்று இலக்கியாவை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மருத்துவமனையில் கிடைத்த தகவலின் பேரில் உடலை கைப்பற்றிய கிண்டி போலீசார் பிரேத பரிசோதனைக்காக இராயபேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, 174 பிரிவின் கீழ் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளவில்லை, கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்திருப்பதாக மருத்துவர்கள் கிண்டி போலீசாருக்கு தெரிவித்தனர். ஜெயராஜிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில், கொலை செய்து, துாக்கில் தொங்க விட்டதை ஒப்புக் கொண்டுள்ளார் மேலும் இருவரும் பணிக்கு செல்வதால், சமைப்பது தொடர்பாக, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் தான் ஆத்திரத்தில் மனைவியை கொன்றதாகவும் தெரிவித்துள்ளார்.இதையடுத்து ஜெயராஜ் காவல்துறையினர் கைது செய்தனர்.