கர்நாடகா, ஜூன் 1 ஆம் தேதி முதல் 9.19 டி.எம்.சி நீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும்

காவிரியிலிருந்து 9.19 டி.எம்.சி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் அதன் தலைவர் மசூத் உசேன் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தமிழகம் சார்பில் காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழகத்தில் குறுவை சாகுபடிக்காக கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறக்கக் கோரியும், மேகேதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவது குறித்து இனிமேல் விவாதிக்க கூடாது என்றும் தமிழக பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர். உச்சநீதிமன்ற ஆணைப்படி, ஜூன் 1 ஆம் தேதி முதல் 9.19 டி.எம்.சி நீரை தமிழகத்திற்கு கர்நாடகா அரசு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இந்தநிலையில் தமிழகத்திற்கு 9.19 டி.எம்.சி நீரை கர்நாடக அரசு உடனடியாக திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகத்தின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக, தமிழக பொதுப் பணித்துறை செயலாளர் பிரபாகர் தெரிவித்துள்ளார். ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி மேலாண்மை ஆணையத்தின் அடுத்த கூட்டம் ஜூன் மாத மத்தியில் நடைபெறக்கூடும் என்றார். 

Exit mobile version