இந்திய நாடு தனது ஆயுத பலத்தையும், அமைதியை விரும்பும் நிலைப்பாட்டையும் உலகுக்குக் காட்டிய கார்கில் போரின் 20-வது வெற்றி தினம் இன்று. தேசத்திற்கு பெருமை தேடித் தந்த நமது இராணுவ வீரர்களின் வீரத்தையும், தியாகத்தையும் நினைவு கூர்வோம் இந்த செய்தித் தொகுப்பில்…
1971ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்தியா, பாகிஸ்தான் இடையே நேரடியான போர்கள் எதுவும் நடைபெறாத நிலையில், கடந்த 1999 ஆம் ஆண்டின் மே 3 ஆம் தேதி, இந்தியாவின் எல்லைப் பகுதியான கார்கிலில், அந்நியர்கள் ஊடுருவியதாக ஆடு மேய்ப்பவர்கள் இந்திய பாதுகாப்புப்படையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
இராணுவ சீருடையில் இல்லாத அந்த அந்நியர்களை முஜாஹிதீன் தீவிரவாதிகள் என்றே முதலில் இந்திய பாதுகாப்புப்படை கருதியது. இதனால் ராணுவம் கார்கிலில் முழுவீச்சில் இறக்கப்படவில்லை. இதை பாகிஸ்தான் இராணுவம் பயன்படுத்திக் கொண்டது. மே 5 அன்று இந்திய இராணுவம் கார்கிலுக்கு அனுப்பிய ரோந்துக் குழுவில் இருந்த 5 வீரர்கள் ஊடுருவல்காரர்களால் கொல்லப்பட்டனர். மே 9ல் ஊடுருவல்காரர்கள் குண்டுவீசியதில், கார்கிலில் இருந்த ஆயுதக் கிடங்கு சேதமானது. தேசிய நெடுஞ்சாலை ஊடுருவக்காரர்களால் குண்டுவீசித் தகர்க்கப்பட்டது.
கார்கில் தாக்குதல்களின் பின்னே பாகிஸ்தான் உள்ளதாக இந்தியா சொன்னபோது, பாகிஸ்தான் அதை முழுவதுமாக மறுத்தது. இதனால் இந்தியாவால் பாகிஸ்தான் மீது இராணுவ நடவடிக்கைகளை எடுக்க முடியவில்லை. இந்த இக்கட்டான சூழலில் முக்கியத் திருப்பமாக, கொல்லப்பட்ட ஊடுருவல்காரர்களிடம் இருந்து கிடைத்த ஆவணங்கள் ‘இது பாகிஸ்தான் இராணுவத்தின் ஊடுருவல்’ என்பதை உறுதிப்படுத்தியது. இதையடுத்து, இந்திய இராணுவம் ‘ஆபரேஷன் விஜய்’ என்ற தனது அதிரடித் தாக்குதலை தொடங்கியது. இதற்காக 2 லட்சம் இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு, தயார் நிலையில் இருந்தாலும், கார்கில் பகுதியின் குறுகலான இடங்கள் காரணமாக, இந்திய இராணுவம் சிறு சிறு குழுக்களாகத்தான் முன்னேறி தாக்குதல் நடத்தியது.
இதற்கிடையே, பாகிஸ்தான் இராணுவத்தின் அன்றைய தளபதி முஷரப்பின் தொலைபேசி உரையாடலை, இந்திய உளவுத்துறை கைப்பற்றியது. அதன் மூலம் சர்வதேச அரங்கில் கார்கில் போரின் பின்னே பாகிஸ்தான் இருப்பதை இந்தியா ஆதாரத்தோடு நிறுவியது. இதையடுத்து, அன்றைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், அன்றைய பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரீபைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, கார்கிலில் இருந்து படைகளைத் திரும்பப்பெறுமாறு வலியுறுத்தினார்.
இதனிடையே, ஆபரேஷன் விஜய் வெற்றியடைந்தது. யுத்தத்திற்கு முதல் ஆளாக சென்ற மேஜர் சரவணன் வெற்றிச் செய்தியுடன் திரும்பினார். ஆனால் அவருடைய பூத உடல் மட்டுமே நமக்கு கிடைத்தது. ஜூலை 14ல் இந்திய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், ஆபரேஷன் விஜய் வெற்றி அடைந்ததாக அறிவித்தார். ஜூலை 26ல் ஊடுருவல்காரர்கள் கார்கிலில் இருந்து முற்றிலும் அகற்றப்பட்டதாக இந்திய இராணுவம் அறிவித்தது. அந்த நாள் கார்கில் வெற்றி நாளாகவும் அறிவிக்கப்பட்டது.
கார்கில் போரில் இந்தியா தனது 527 வீரர்களைப் பறிகொடுத்தது. 1,363 பேர் படுகாயம் அடைந்தனர். நமது வீரர்களின் தியாகத்தைப் போற்றும் விதமாக கார்கில் பகுதியில் நினைவுச் சின்னமும் அமைக்கப்பட்டது. இந்நாளில் உயிரைக் கொடுத்து மண்ணைக் காத்த மகத்தான வீரர்களை நாம் போற்றுவோம்.