குஜராத், மகாராஷ்டிர மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, அன்றாடத் தேவைப் பொருட்கள் வழங்கும் பணியில் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
குஜராத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வதோதரா நகரில் பெரும்பாலான பகுதிகள் தண்ணீரில் மூழ்கின. மழைப் பொழிவு குறைந்து வெள்ளம் வடியத் தொடங்கியுள்ள நிலையில், மீட்பு நிவாரணப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. வதோதராவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்குத் தனியார் நிறுவனம் சார்பில் உணவுப் பொட்டலங்கள், குடிநீர் பாட்டில்கள், அன்றாடத் தேவைப் பொருட்கள் வழங்கப்பட்டன.
மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டம் ராஜாப்பூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசியப் பேரிடர் மீட்புப் படையினரும், கடற்படையினரும் இணைந்து மீட்பு நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு உணவு, குடிநீர், அன்றாடத் தேவைப் பொருட்களை வழங்கி வருகின்றனர். மருத்துவர்கள் இடம்பெற்றுள்ள குழுவினர் இலவச மருத்துவ முகாம் நடத்தி மக்களுக்குச் சிகிச்சை அளித்து மருந்துகளையும் வழங்கி வருகின்றனர்.