டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்! அஜித் பவாரின் பவர்! மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பம்!

மகாராஷ்டிராவை ஆண்டு கொண்டிருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியானது உட்கட்சிப் பூசல் காரணமாக பிளவு பெற்றது. இதன் விளைவாக மூத்தத் தலைவர் அஜித் பவார் தலைமையில் 40 எம்.எல்.ஏக்கள் மகாராஷ்டிராவில் உள்ள பாஜக கூட்டணி அரசில் இணைந்தனர். இதனால் சரத்பவாருக்கு அரசியில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு அக்டோபரில் மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. அதில் பாஜக் 105 இடங்களும், அதனுடன் கூட்டணி வைத்திருந்த சிவசேனா கட்சி 56 தொகுதிகளும் வென்றன. முதல் பதவி யாருக்கு என்று போட்டி நிலவிய நிலையில் கூட்டணி உடைந்தது. பாஜகவின் மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றார். எதிர் அணியில் இருந்த தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவர் அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். அப்போது தேசிய வாத காங்கிரஸ்  எம்.எல்.ஏக்கள் ஆதரவு தராததால் ஆட்சி கவிழ்ந்தது.

டிவிஸ்ட் அரசியல்..!

பிறகு மகாராஷ்டிர அரசியலில் டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட் வந்துகொண்டே இருந்தது. இந்திய அளவில் எடுத்துக்கொண்டால் கர்நாடகாவில்தான் இதுபோல் ஆட்சிமாற்றங்கள் நடக்கும். அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் இப்படி நடந்திருப்பது அரசியல் வட்டாரங்களிடையே மிகப்பெரிய கவனத்தினைப் பெற்றது. பிறகு எப்படியோ காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் சிவசேனா கைகோர்த்தது. நவம்பர் 2019ல் இந்த புதிய கூட்டணி அமைந்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சராகவும், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.

இரண்டரை ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு சிவசேனா மூத்த தலைவரும் அமைச்சருமான ஏக்நாத் ஷின்டே, முதல்வர் உத்தவ் தாக்கரேவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். பெரும்பான்மையான சிவசேனா எம்.எல்.ஏக்கள் ஷிண்டே பின்னால் சென்றனர். பாஜகவும், சிவசேனாவின் ஏக்நாத் ஷின்டே அணியும் இணைந்து புதிய அரசை அமைத்தனர். இது 2022 ஜூன் 30 ஆம் தேதியிலிருந்து தற்போது வரை தொடர்ந்தது. ஷிண்டே முதல்வராகவும், பாஜகவின் மூத்தத் தலைவர் தேவந்திர பட்னாவிஸ் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.

அஜித் பவாரின் பவர் அரசியல்..!

பின்னர் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸில் இருந்து விலகப்போவதாகவும் அவருடன் 40 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைவதற்கு தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. அதனைத் தொடர்ந்து கட்சித் தலைவர் பதவியிலிருந்து சரத் பவார் விலகப்போவதாக கூறினார் . கட்சி உடைவதை தடுக்கவே இதை செய்ய உள்ளதாக தகவல் தெரிவித்தார். பின் 4 நாட்கள் பிறகு தனது ராஜினாமா எண்ணத்தை மாற்றி தலைவராக தொடர்ந்தார். அப்போது இருந்து அஜித் பவார் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். கடந்த மாதம் ஜூனில் என்சிபி செயல் தலைவர்களாக சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே, பிரபுல் படேல் அறிவிக்கப்பட்டனர். இதனால் அதிருப்தி அடைந்த அஜித் பவார் 40 எம்.எல்.ஏக்களுடன் ஆளும் பாஜக கூட்டணியுடன் இணைந்தார். பிறகு அஜித் பவார் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டார். மும்பையில் ஆளுநர் ரமேஸ் பயஸ் முன்னிலையில் அஜித் பவார் துணைமுதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். உடன் முதல்வர் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் பட்னாவிஸ் இருந்தனர். அஜித் பவாரின் எட்டு எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

Exit mobile version