பயங்கரவாத இயக்கங்கள் மீது, பாகிஸ்தான் கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் கூடாரமாக திகழ்ந்து வருவதாகவும், அந்நாடு பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வருவதாகவும் இந்தியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. மேலும் பாகிஸ்தான் தனது மண்ணில் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாக கூறி அந்நாட்டுக்கு வழங்கி வந்த ராணுவ நிதியுதவியை அமெரிக்கா அதிரடியாக நிறுத்தியது.
எனினும் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வந்த பாகிஸ்தான் தங்கள் நாட்டில் பயங்கரவாத இயக்கங்கள் இல்லை என கூறிவந்தது. இந்த நிலையில் பாகிஸ்தானில் 40–க்கும் மேற்பட்ட பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருவதாக, அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஒப்புக்கொண்டார்.
இந்த நிலையில், இம்ரான்கானின் உரையை சுட்டிக்காட்டிய இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஸ் குமார், பயங்கரவாத இயக்கங்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் கூறியுள்ளார்.