உலக கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணியை போராடி வீழ்த்தியது இந்திய அணி

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி போராடி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் உலக கோப்பை போட்டிகளில் தன்னுடைய 50-வது வெற்றியை இந்தியா பதிவு செய்தது.

இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் நடைபெற்ற ஆட்டத்தில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ஒரு ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி, ராகுலுடன் ஜோடி சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 30 ரன்கள் எடுத்த நிலையில் ராகுல் அவுட் ஆனார்.

இதையடுத்து விஜய் சங்கர் 29 ரன்களுக்கும், கோலி 67 ரன்களுக்கும், தோனி 28 ரன்களுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கேதர் ஜாதவ் நிலைத்து நின்று ஆடி இந்திய அணியின் ஸ்கோரை ஓரளவுக்கு உயர்த்தினார். 50 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்களை குவித்தது.

இதையடுத்து 225 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் ஹஷ்ரத் சசல் 10 ரன்களுக்கு அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து குல்பதின் நைப் 27 ரன்களுக்கும், ரஹ்மத் ஷா 36 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

ஒரு பக்கம் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தாலும் மறுபுறம் அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் ஆப்கானிஸ்தானின் நபி ஈடுபட்டார். கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இந்திய அணியின் முகமது சமி வீசிய பந்தில் ஆப்கானிஸ்தானின் நபி, ஆலம், ரஹ்மான் ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆகினர். ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்களை எடுத்தது. இதையடுத்து இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மேலும் உலக கோப்பை தொடரில் 50-வது வெற்றியை பெற்றுள்ளது. சிறப்பாக பந்து வீசி வெற்றிக்கு வழி வகுத்த பும்ரா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் வருகின்ற 27 ஆம் தேதி மான்செஸ்டரில் நடைபெறும் போட்டியில் இந்திய அணி வெஸ்ட் இண்டிஸ் அணியை எதிர் கொள்கிறது.

Exit mobile version