ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேருந்து நிலையம் அருகே ஆட்டோ ஒன்றில் ஆண், பெண் சென்று கொண்டிருந்துள்ளனர். திடீரென்று ஆட்டோவில் இருந்த பெண் அலறவே, ஓட்டுநர் ஆட்டோவை நிறுத்தியுள்ளார். திரும்பிப் பார்த்தபோது இளம்பெண்ணின் கழுத்தில் உடனிருந்த இளைஞர் பிளேடால் அறுத்துள்ளார். இளம்பெண்ணுக்கு கழுத்தில் ரத்தம் வந்த நிலையில், ஆட்டோவில் இருந்து இறங்கி தப்பிச் செல்ல முயன்ற அந்த இளைஞரை, அங்கிருந்தவர்கள் உதவியோடு பிடித்த ஆட்டோ ஓட்டுநர் உடனடியாக போலீசில் ஒப்படைத்தார்.
தொடர்ந்து அந்தியூர் அரசு மருத்துவமனையில் இளம்பெண்ணை மருத்துவசிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட இளம்பெண் ஆபத்தான நிலையில் தொடர் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனிடையே காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட இளைஞரை விசாரித்தபோது இருவரும் கலப்பு மணம் புரிந்த காதல் தம்பதி என்று தெரியவந்தது.
குன்னூரை சேர்ந்த அந்த இளம்பெண் ராஹிலா, அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையத்தில் தங்கியிருந்தபடி மைக்கேல்பாளையம் பகுதியில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் ஸ்போக்கன் இங்கிலிஷீஸ் வகுப்புக்கான தற்காலிக ஆசிரியையாகப் பணி புரிந்து வந்துள்ளார். அவரது கழுத்தை பிளேடால் அறுத்தவர் குன்னூரை சேர்ந்த ஜீவா என்பவராவார். ஜீவாவும், ராஹிலாவும் ஓராண்டாக காதலித்து வந்ததாகவும், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பாக இருவரும் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
காதலித்து கலப்பு மணம் புரிந்த ஜீவா தனது மனைவியின் கழுத்தை அறுத்தது ஏன்? வேறு ஏதேனும் பிரச்சனையா? அல்லது நாடகக் காதலா என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.