காலி.. 12 லட்சம் காலி..! பழகுவதில் இனிமை..ஆட்டேஸ் போடுவதில் எளிமை! பேஸ்புக் தோழியால் வந்த வினை!

சிவகாசியில் பேஸ்புக் மூலம் பழகிய நபரிடம் 12 லட்சத்தை அபேஸ் செய்து தலைமறைவான பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பெண்ணின் ஆசை வார்த்தைக்கு மயங்கி பல லட்சத்தை பறிகொடுத்த நபரின் பரிதாப நிலை குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.

பேஸ்புக் மூலம் பழகிய நபரிடம் 12 லட்சத்தை அபேஸ் செய்து தலைமறைவாகியுள்ளார் இந்த தில்லாலங்கடி பெண்…

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தாலுக்காவை சேர்ந்தவர் 41 வயதான ரமேஷ். இவர் அங்குள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் காண்டிராக்டராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் ரமேஷ் தனது பேஸ்புக் மூலம் சிவகாசி, ஆலங்குளத்தை சேர்ந்த செல்வம் என்பவரின் மனைவி பேச்சியம்மாளிடம் அறிமுகம் ஆகி கடந்த 1 வாரமாக தோழமையுடன் பழகி வந்துள்ளார்.

அப்போது பேச்சியம்மாள் தான் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக இருப்பதாகவும், 380 கிராம் தங்க நகைகள் வங்கி மூலம் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும், அவற்றை குறைந்த விலையில் வாங்கிக் கொள்ளலாம் எனவும் ஆசை வார்த்தை கூறி நகைகளின் புகைப்படங்களை அனுப்பியுள்ளார். இதனைக் கண்டு மயங்கிய ரமேஷ், அந்த பழைய நகைகளை வாங்க முடிவு செய்து, ஈரோட்டில் இருந்து தனது நண்பர்கள் 2 பேருடன் சிவகாசி வந்துள்ளார்.

இதனையடுத்து சிவகாசிக்கு சென்ற ரமேசை சந்தித்த பேச்சியமாள், விருதுநகர் ரோட்டிலுள்ள ஒரு வங்கிக்கு அழைத்துச் சென்று, இந்த வங்கியில் தான் பழைய நகைகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். பின்னர் அவற்றை மீட்பதற்காக ரமேஷிடம் இருந்து 11 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளார். இதனையடுத்து ரமேஷின் நண்பர்கள் 2 பேரையும் வங்கியின் முன்பு நிற்க சொல்லிவிட்டு, பேச்சியம்மாள் தனது இருசக்கர வாகனத்தில் ரமேசை மட்டும் அழைத்துக் கொண்டு சிவகாசி-வெம்பக்கோட்டை சாலையில் உள்ள ஒரு வங்கிக்கு சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு வங்கிக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் பாக்கி பணம் 1 லட்சத்து 58 ஆயிரத்தையும் ரமேஷிடத்தில் கேட்டு வாங்கியுள்ளார். இவற்றைக் கண்ட ரமேஷ், 3 வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட நகைகளை மீட்டு நமக்கு தரப்போகிறார் என எண்ணிய நிலையில் தான் அதிர்ச்சி சம்பவம் காத்துக் கொண்டிருந்தது.

அப்போது திடீரென தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தில்லால்லங்கடியான பேச்சியம்மமாள் சிட்டாக பறந்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேஷ், தான் ஏமாற்றப்பட்டதை தனது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிவகாசி டவுன் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிந்த போலீசார், தலைமறைவான ஆலங்குளத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மனைவி பேச்சியம்மாள் மீது மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு நபரிடம் 12 லட்சத்து 58 ஆயிரத்தை இளம்பெண் மோசடி செய்துவிட்டு பறந்து சென்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version