மணல் மாஃபியாவால் விஏஓ படுகொலை.. உயிரைக் காக்கத் தவறிய குற்றத்துக்காக பதவி விலகுவாரா நெஞ்சுக்கு நீதியின் மகன்?

மகளுக்கு ஒரு வாரத்தில் நிச்சயதார்த்தம் உள்ள நிலையில் மணல் மாஃபியா கும்பலால் வெட்டி சாய்க்கப்பட்டிருக்கிறார் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ்… உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்தும் ஒரு உயிரைக் காக்கத்தவறிய குற்றத்துக்காக தனது பதவியை விட்டு விலகுவாரா நெஞ்சுக்கு நீதி எழுதியவரின் மகன்?

அன்றைய நாளின் பணிகுறித்து சிந்தனையோடு அமர்ந்திருந்தவரை அங்கு வந்த கலியாவூரை சேர்ந்த ராமசுப்பிரமணியன், மாரிமுத்து ஆகியோர் அரிவாளால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

அறையெங்கும் ரத்த வெள்ளம்… உயிரைக் காப்பாற்றிக் கொள்ள லூர்து பிரான்சிஸ் நடத்திய போராட்டத்தால் சிதறிய பொருட்களில் படிந்திருந்த ரத்தத்துளிகள்… அரிவாள் வெட்டை தடுத்ததால் காயம்பட்ட கரங்கள்… மூர்க்கத்தனமான தாக்குதல், அரிவாள்களின் ஆவேசம்… உடலில் இருந்து வெளியேறிய ரத்தத்தால் மூச்சு அடங்கியிருந்தது லூர்து பிரான்சிஸுக்கு…

மணல் கொள்ளையில் ராமசுப்பிரமணியன் ஈடுபட்டதாக முறப்பநாடு காவல்நிலையத்தில் கடந்த 13ஆம் தேதி லூர்து அளித்த புகாருக்கு எப்.ஐ.ஆர் போட்ட காவல்துறை அந்த தகவலை கசிய விட, ராமசுப்பிரமணியன் தனது நண்பர் மாரிமுத்துவோடு வந்து இந்த கொலையாட்டத்தை ஆடிச் சென்றிருக்கிறார்…

55 வயது லூர்து பிரான்சிஸ் இன்று இல்லை… மீன்பிடித் தொழிலாளியான இயேசுவடியானின் 5 பிள்ளைகளில் 3வது மகனான லூர்து பிரான்சிஸ் மட்டுமே அரசுப் பணியில் இணைந்துள்ளார். 20ஆண்டுகளாக கிராம நிர்வாக அலுவலராகப் பணி செய்தவர் தனது நேர்மையின் காரணமாக பல்வேறு இடமாறுதல்களை சந்தித்துள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்புதான் முறப்பநாட்டுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். வந்தது முதலே இங்கு நடைபெறும் மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுத்து வந்தவர் இன்று மணல் மாஃபியா கும்பலால் கொலையாகி இருக்கிறார்.

மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் என அமைதியான குடும்பம் லூர்து பிரான்சிஸுக்கு… மூத்த மகன் ராகேஷ் ஆல்வின் ரயில்வேயிலும், இரண்டாவது மகன் மார்ஷல் யேசுவடியான் மதுரை ஐகோர்ட்டிலும் பணியாற்றி வருகிறார்கள். மகள் அருள் விசி ராகேல் ஆசிரியர் பயிற்சி முடித்து இருக்கிறார். வரும் வாரம் மகளுக்கு திருமண நிச்சய ஏற்பாடுகளைச் செய்த நிலையில்தான் லூர்து பிரான்சிஸின் இறுதி காரியங்களை செய்யும் அவலம் குடும்பத்தினருக்கு ஏற்பட்டுள்ளது.

பூமித்தாயின் மடி கிழித்து மணல் கொள்ளையில் ஈடுபட்ட மாஃபியாக்களை தடுத்தவர் இன்று அந்த மண்ணிலேயே வெட்டி சாய்க்கப்பட்டிருக்கிறார். ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்… அரசு இருக்கிறது… நம்மைப் பாதுகாக்கும் என்று நம்பிக்கையுடன் தனக்கு ஏற்கனவே நிகழ்ந்த கொலை முயற்சி குறித்தெல்லாம் தெரிவித்தும் அரசும் ஆட்சி நிர்வாகமும் பாதுகாப்பு அளிக்காமல் அலட்சியத்துடன் கைவிட்டதால் இன்று அநியாயமாகப் பறிபோயிருக்கிறது ஒரு உயிர்… ஒரு குடும்பத்தின் ஆணிவேர்… நேர்மையான அரசு ஊழியர்களின் ஒரு அடையாளம்…

என்ன செய்தது திமுக அரசு இந்த ஈடுசெய்ய முடியாத இழப்புக்காக? கொலையாளிகளை கைது செய்தது…. ஒரு கோடி ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது!
சாத்தான்குளம் தந்தை மகன் கொலையில் எதிர்க்கட்சியாக இருந்து துடித்த துடிப்பு… ஆளும் முதல்வர் பதவி விலக வேண்டும் என்னும் கோஷம் எல்லாம் இன்று கோட்டையில் கோலோச்சியதும் எங்கே போனது? எதிர்க்கட்சியாக இருந்தபோது இருந்த வீரியம் இன்று அடங்கிப் போய்விட்டதா?

மணல் கடத்தல் புகார் அளித்த அன்றே கைது செய்திருந்தால் இந்த கொலை நிகழ்ந்திருக்காது… இங்கே பணி செய்ய எனது நேர்மை இடம் கொடுக்கவில்லை என்று குரல் எழுப்பிய அன்றே வேறு இடத்துக்கு மாற்றியிருந்தால் அவரது உயிர் பறிக்கப்பட்டிருக்காது… இது எதையும் செய்யாமல் இன்று ஒரு கோடி ரூபாய் அறிவித்து கடமையை முடித்துக் கொண்டிருக்கிறது விடியா அரசு… நீங்கள் இன்னும் 30ஆயிரம் உயிர்களைப் பறித்தால் கூடநிவாரணம் கொடுக்க நிதி இருக்கலாம்…. ஆனால் உங்கள் ஆட்சியில் நீதி இல்லை… நெஞ்சுக்கு நீதி எழுதியவரின் மகனுக்கு நீதியைக் காக்க தைரியமில்லை… அப்படி இருந்திருந்தால் இந்நேரம் பதவியில் இருந்து அல்லவா விலகி இருக்க வேண்டும்!

Exit mobile version