தகுதி நீக்க நடவடிக்கையால் எடியூரப்பாவுக்கு பிரச்னை இல்லை

கர்நாடகாவில் 17 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ் குமார் அதிரடியாக உத்தரவிட்ட நிலையில், முதலமைச்சர் எடியூரப்பா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

கடந்த வியாழக்கிழமை அன்று அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவிட்டார். முதலமைச்சராக பதவியேற்றுள்ள எடியூரப்பா, சட்டப்பேரவையில் இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உள்ள நிலையில், பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் ரமேஷ் குமார், ராஜினாமா கடிதம் வழங்கிய அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களில் மேலும் 14 பேரை தகுதி நீக்கம் செய்வதாக அதிரடியாக அறிவித்தார்.

இந்நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய சட்டப்பேரவை பதவிக்காலம் முடியும் 2023 ஆம் ஆண்டு வரை தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் போட்டியிட முடியாது என சபாநாயகர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கத்தால், இன்று நடைபெறவுள்ள வாக்கெடுப்பிற்கும் எந்தவித பிரச்சினையும் இருக்காது என்று பாஜக உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். மொத்தமாக 224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடகா சட்டமன்றத்தின் தற்போதைய பலம் 207 ஆக குறைந்துள்ளது. இதனிடையே, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளனர்.

Exit mobile version