டிப் டாப்பாக வலம் வந்த போலி செய்தியாளர் கைது

ஈரோட்டில் செய்தியாளர் என கூறி பஞ்சாயத்து தலைவர் முதல் செயலர் வரை மிரட்டி பணம் வசூல் செய்து வந்த போலி  செய்தியாளரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம்  சென்னிமலை அருகே தட்டாங்காடு பிரிவு பகுதியை சேர்ந்தவன் வெள்ளியங்கிரி. சென்னையை தலைமையிடமாக கொண்டு  வெளிவரும் தினசரி பத்திரிக்கையின் பெருந்துறை தாலுகா செய்தியாளர் என்று கூறிக்  கொண்டு அரசு அதிகாரிகள், பஞ்சாயத்து தலைவர், செயலர், பார் உரிமையாளர்களை செய்தி வெளியிட்டுவிடுவேன் என  மிரட்டி பணம் பறிப்பது வெள்ளியங்கிரி-யின் வழக்கம். அதேபோல் சென்னிமலை ஊராட்சி ஒன்றிய ஊழியர்   பூங்கொடி என்பவரிடம் உங்களைப்பற்றி செய்தி வெளியிட்டு விடுவேன் என கூறி பணம் பறித்ததுடன், செய்தி வெளியிடாமல் இருக்க மாதா மாதம் எனக்கு  பணம் தர வேண்டும் என்றும் மிரட்டி உள்ளான். இந்த மிரட்டல் குறித்து பூங்கொடி காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் வெள்ளையங்கிரியை மடக்கிய காவல்துறையினர் அவனை கைது செய்து விசாரித்த போது பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. சென்னிமலை, பெருந்துறை பகுதிகளில் அரசு அதிகாரிகள், பஞ்சாயத்து தலைவர்களை செய்தியாளர் எனக்கூறி மிரட்டுவதும், பார் உரிமையாளர்களிடம் தினசரி 300 ரூபாய் மாமூல் தர வேண்டும் என எச்சரிக்கை விடுப்பதுமான ஆடியோ அவனது செல்போனில் இருந்து போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

மேலும்  சென்னையை சேர்ந்த இளம் பெண் ஒருவரை, குளிக்கும் போது மறைந்திருந்து செல்போனில் படம் பிடித்து, அந்த பெண்ணை பகிரங்கமாக மிரட்டுவதும், அதற்கு இளம் பெண் தற்கொலை செய்வதாக கதறுவதுமான ஆடியோ இருந்ததை கண்டு அதிர்ந்து போனார்கள் காவல்துறையினர். முதல் கட்டமாக தற்போது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள சென்னிமலை போலீசார் டூபாக்கூர் செய்தியாளரை சிறைக்கு அனுப்பி வைத்தனர். சமீப காலத்தில் 10 க்கும் மேற்பட்ட போலி செய்தியாளர்கள் ஈரோடு மாவட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version