2-வது அரையிறுதி போட்டி: இங்கிலாந்து-ஆஸி. இன்று பலப்பரீட்சை

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 12-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் நடந்த முதலாவது அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்தி நியூஸிலாந்து முதல் அணியாக இறுதி போட்டிக்கு நுழைந்தது. இந்நிலையில் இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

நடப்பு உலக கோப்பை தொடரில் இந்த இரு அணிகளும் மோதிய லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தனது கடைசி போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியிடம் தோல்வியடைந்த நிலையில், டேவிட் வார்னர் மட்டுமே 3 சதம் அடித்து அந்த அணியின் நம்பிக்கையான வீரராக உள்ளார்.

அதேபோல் பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி நடப்பு தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவராக உள்ளார். இங்கிலாந்து அணியை பொறுத்த வரை ஜானி பேர்ஸ்டோ கடந்த போட்டியில் சதம் அடித்து ஃபார்முக்கு திரும்பியது அந்த அணிக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. பந்து வீச்சில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணியின் தவிர்க்க முடியாத பந்து வீச்சாளராக உள்ளார்.

இப்போட்டியில் வெற்றிபெற்று சொந்த மண்ணில் உலக கோப்பையை கைப்பற்ற இங்கிலாந்தும், இறுதி போட்டிக்கு முன்னேற ஆஸ்திரேலியாவும் தீவிரம் காட்டி வருகின்றன. பெர்மிங்காமில் நடைபெறும் இப்போட்டி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.

Exit mobile version