கடலில் பேனா வேண்டாம்!

திமுக அரசு தற்போது ஆட்சியில் இருந்துகொண்டு மக்கள் நலன் திட்டத்தில் கவனம் செலுத்தாமல் தன் குடும்ப நலனில் மட்டுமே அதிகமாக கவனம் செலுத்துகிறது. தன் குடும்பப் பெருமையும் குலப் பெருமையும் பேசுவதற்கும் வளர்ப்பதற்கும்தான் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளதா என்று மக்கள் பலர் கேள்வி எழுப்பும் நிலையில்தான் இந்த அரசின் செயல்பாடு இருந்து வருகிறது. இந்த லட்சணத்தில் விடியா திமுகவின் முன்னாள் தலைவரும் தற்போதைய திமுக தலைவரின் தந்தையுமான கருணாநிதியின் புகழைப் பரப்புவதற்காக மெரினாவில் பேனா சிலை வைக்கத் திட்டமிட்டுள்ளது இந்த விடியா திமுக அரசு.

சென்னை மெரினாவில் கடலுக்குள் 134 அடி உயரத்துக்கு இந்த பேனா வடிவ சிலை அமைப்பதற்காக திட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த சிலை மறைந்த கருணாநிதியின் நினைவிடத்தில் இருந்து 650 மீட்டர் தூரத்திலும், கடற்கரையிலிருந்து 360 மீட்டர் தூரத்திலும் அமைய உள்ளது. ஆனால் நினைவிடத்தினை ஒட்டியே அந்தப் பேனா சிலையினை அமைப்பதற்கான போதிய இடம் உள்ளது. அதைவிட்டு கடலில்தான் அமைப்போம் என்று திமுக அடம்பிடிப்பது மிகப்பெரிய அபத்தம். மேலும் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் வசிக்கும் மீனவர்களின் கருத்துக்களை துளியும் மதிக்காமல் இது போன்ற நடவடிக்கையில் திமுக ஈடுபட்டு வருகிறது. மீனவர்களின் மீன்பிடி தகவல்களை முறையாக கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டத்தில் பதிவு செய்யாமல் கடல் நடுவே பேனா நினைவுச் சின்ன திட்டத்தை அமைக்க இந்த திமுக அரசு வழிவகை செய்துள்ளது. இதன்மூலம் கரைதொழிலை நம்பியிருக்கும் மீன்வர்களின் தொழில் பாதிக்கப்படும் என்ற சிறு பகுத்தறிவு கூட இல்லாமல் திமுக செயல்படுகிறது. ஊருக்கெல்லாம் பகுத்தறிவு பாடம் எடுக்கும் திமுகவினர் இந்த பேனா சிலை விவகாரத்தை பகுத்தறிவு இன்றி வழிபாட்டு முறையாக செய்து வருகிறார்கள்.

இந்த பேனா சிலையை அமைப்பதற்கு 81 கோடி ரூபாய் செலவாகும் என்று தெரிவிக்கிறார்கள். இது யாருடைய காசு? நிச்சயம் தமிழக மக்களின் வரிப்பணமாகத்தான் இருக்கும். தன்னுடைய பணத்தினை செலவு செய்து கட்டுவதில் ஒரு நியாயம் உண்டு. அடுத்தவர் பணத்தைக் கொண்டு சிலை அமைப்பது எந்த வகையில் நியாயாம்?. இதில் சில திட்டங்களுக்கு போதிய நிதி இல்லை என்றுவேறு விடியா அரசின் முதல்வர் கருத்து தெரிவிக்கிறார். சிலைக்குப் பணம் உண்டு, மக்களின் வாழ்க்கை நிலைக்கு பணம் இல்லையா?. இது மிகப்பெரிய கண் துடைப்பாக இருக்கிறது. முதியோர் ஓய்வூதியத்தினை குறைத்தது இந்த சிலை அமைப்பதற்குத்தானா? இந்தப் பேனா எழுதினால் கூட எதாவது பயன்பாடு இருக்கும். இது வெற்று சிலை தானே? இது எதற்கும் பிரயோஜனம் இல்லை. அதுவும் திருவள்ளுவரின் 133அடி சிலையை விட ஒரு அடி கூடுதலாக அமைக்க நினைப்பது வள்ளுவரைவிட கருணாநிதி சிறந்தவர் என்று காட்டுவதற்கான முயற்சிதானே. தன் குடும்பத்தின் புகழ் ஓங்க வேண்டும், குடும்ப நலன் பெருக வேண்டும் என்று வாழ்நாள் முழுவதும் இப்படி செய்துகொண்டு இருக்கும் முதலமைச்சரை இந்தியாவில் வேறு எங்கும் காண முடியாது. ஆகவே இந்தப் பேனா சிலை தமிழகத்திற்கு தேவையில்லாத ஒரு சுமை. கொஞ்சமாவது மக்கள் நலனின் அக்கறை செலுத்துங்கள் ஆட்சியாளர்களே!

Exit mobile version