இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! திமுகவிற்குள் உட்கட்சிப் பூசலால் டிஷ்யூம் டிஷ்யூம்!

உள்ளாட்சித் தேர்தல்களில் பணத்தை வாரி செலவிட்டு, வெற்றி பெற்ற திமுக, இப்போது செலவிட்ட பணத்தை வசூலிக்கும் பணியை ஜரூராக செய்துவருகிறது. இதில், பல்வேறு ஒப்பந்தங்களுக்கு மேயர்கள் கமிஷன் வாங்குவதால், கமிஷன் கிடைக்காத கவுன்சிலர்கள் மேயர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வருகின்றனர். பல மாநகராட்சிகளில் இந்த நிலையே இருக்க, தற்போது நெல்லை திமுகவில் இந்த விவகாரம், பெரும் உட்கட்சி மோதலாக வெடித்துள்ளது.

நெல்லை திமுக மேயரை மாற்ற வேண்டும், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என 40க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் போர்க்கொடி தூக்க, ஒரே கலேபரம் ஆகியிருக்கிறது திருநெல்வேயில்…

உடனே, நெல்லை மேயர் சரவணனிடம், மன்னிப்பு கடிதம் மற்றும் ராஜினாமா கடிதத்தை திமுக தலைமை கேட்டு பெற்றதாக தகவல் வெளியான நிலையில், இல்லவே இல்லை என்று மறுத்தார் நெல்லை மேயர் சரவணன்.

இந்த மறுப்பு வந்து 24 மணிநேரம் கூட ஆகவில்லை அதற்குள் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் பஞ்சாயத்தை நடத்தியிருக்கிறது திமுக. மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, 3 மண்டல சேர்மன்கள் என பலரோடு நடந்த இந்த பஞ்சாயத்தில், ஏக கூத்துக்கள் நடந்திருக்கிறது. மேயரை மண்டல சேர்மன்கள் குறைசொல்ல, கவுன்சிலர்களை மேயர் குறை சொல்ல என்று ஒரு பள்ளிக்கூட போரே நடந்திருக்கிறது… எப்போது வேண்டுமானாலும், நெல்லை மேயர் பதவி காலியாகலாம் என்றும் கூறுகிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்..

இதுஒரு புறம் என்றால், கடலூர் மாநகராட்சியில் கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஒரே ஓட்டமாக மாநகராட்சி அலுவலகத்தை விட்டே வெளியேறினார் மேயர்…

இதுமட்டுமா? திருச்சியில் தன்னை சாதி பார்த்து இருக்கை ஒதுக்கியதாக மேயர் மீது, கூட்டணியில் உள்ள விசிக கவுன்சிலரே புகார் வாசிக்கிறார்….
மதுரையில் பிடிஆரின் ஆதரவாளர் என்பதால் பெண் மேயர் இந்திராணியை எல்லா இடங்களிலும் புறக்கணிக்கிறார்கள் திமுகவின் மாவட்ட செயலாளர்கள் முதல் கவுன்சிலர்கள்வரை..

உட்கட்சி பூசல் ஒருபுறம் என்றால், சென்னை துணை மேயரான மகேஷ் மீது 6 பிரிவுகளில் முறையாக வழக்கு பாய்ந்திருப்பதால், எந்நேரமும் அவர் கைதாகலாம் என்றும் கூறப்படுகிறது…

ஆக மொத்தத்தில் மாநகராட்சிகளில் இப்பவோ அப்பவோ என்ற இழுத்துக்கொண்டிருக்கிறது திமுகவின் உட்கட்சி விவகாரங்கள்.. நிலைமை இப்படியே போனால், எப்போது தேர்தல் வந்தாலும், உட்கட்சி பிரச்சானையாலேயே தோல்வியை தழுவும் திமுக என்று கணிக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்…

மாநகராட்சி மேயர்-கவுன்சிலர்கள் மத்தியில் நிலவும் இத்தகைய மோதல் போக்கால் மீண்டும் தூக்கம் தொலைத்து விட்டாரா ஸ்டாலின்? உட்கட்சிக்குள்ளேயே ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க முடியாத ஸ்டாலின் தமிழ்நாட்டு பிரச்சனைகளை எப்படி தீர்க்கப்போகிறார்? ஆக மொத்ததில், உள்ளே இருக்கும் தன் சொந்தக் கட்சிகாரர்களாலேயே அழிந்து போகப்போகிறது திமுக என்பதுதான் தெளிவாகிறது.

Exit mobile version