சேலம் மாவட்டம் கருமந்துறையில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற வேட்பாளர் சுதீஷை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், அதிமுக அரசின் திட்டங்களால் அனைத்து தரப்பு மக்களும் ஏதோ ஒருவகையில் பயன்பெற்று வருவதாகவும் ஆனால், ஏழை மக்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் கொடுப்பதை தடுக்கும் கும்பல் திமுக கும்பல் என குற்றம் சாட்டினார். 11 ஆண்டுகாலமாக மத்தியில் அங்கம் வகித்த திமுக, மக்கள் பிரச்சனைகள் எதையும் தீர்க்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.
நாட்டின் பாதுகாப்பை பிரதமர் மோடி மட்டுமே உறுதி செய்ய முடியும் என்பதை அவர் நிரூபித்து காட்டியுள்ளதாக தெரிவித்தார். நாட்டில் நிலையான ஆட்சி இருந்தால்தான் நாட்டு மக்கள் நிம்மதியாக இருக்க முடியும் என்றும் இதை அளிக்க மோடி மீண்டும் பிரதமராக நீடிக்க துணை நிற்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
காவிரி கோதாவரி இணைப்பை அதிமுக அரசு நிறைவேற்றியே தீரும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும், தேர்தலில் எதிரிகளுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். திமுகவின் தேர்தல் அறிக்கை வெத்து அறிக்கை என்று குறிப்பிட்ட முதல்வர், மக்களை ஏமாற்றும் வகையிலான அறிக்கை என்று தெரிவித்தார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆசியில் அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாக முதல்வர் பட்டியலிட்டார்.
Discussion about this post