உதகை அருகே தலைகுந்தா பகுதியில் 50 ஆண்டுகளாக தூர் வாரப்படாமல் இருந்த கால்வாயை தூர்வாரி தூய்மை படுத்தும் பணியில் மாவட்டம் நிர்வாகம் முழு வீச்சீல் இறங்கியுள்ளது.
உதகையை அடுத்த தலைகுந்தா பகுதியில் கனமழையின் போது உதகை – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தில் நீர் சூழ்ந்து, மண் அடைப்பு ஏற்படுகிறது. இதனால் போக்குவரத்து பாதிப்படைந்து வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பாதிப்படைகின்றனர். இதற்கு காரணம் 50 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருக்கும் தலைகுந்தா பகுதி கால்வாய் என்கின்றனர் அப்பகுதி மக்கள். இந்தநிலையில், கால்வாயை தூர்வாரும் பணிகளை மாவட்ட நிர்வாகம் துவங்கியுள்ளது. அப்பகுதியில் குளம் அமைத்து, மழை காலங்களில் வரும் நீரை சேமித்து வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. சேமித்து வைத்த நீர் வீணாக்காமல், காமராஜர் அணைக்கு கொண்டு செல்வது குறித்து பரிசீலித்து வருவதாக, மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.