ஐபிஎல் 2019: ராஜஸ்தானை வீழ்த்தி 2-வது இடத்துக்கு முன்னேறிய டெல்லி அணி

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-வது இடத்திற்கு முன்னேறியது.

ஐபிஎல் தொடரின் 53-வது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. ஏற்கெனவே ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில், டெல்லி அணி தனது கடைசி லீக் போட்டியில் மோதுகிறது. அதேபோல், 13 போட்டிகளில் விளையாடி 11 புள்ளிகளை பெற்று ஏறக்குறைய அடுத்த சுற்று வாய்ப்பை இழந்த ராஜஸ்தான் அணிக்கும் இந்த தொடரின் கடைசி போட்டி இதுவாகும்.

டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ரகானே வெறும் 2 ரன்களிலும், லிவிங்ஸ்டன் 14 ரன்களிலும், சஞ்சு சாம்சன் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களம் இறங்கிய ராஜஸ்தான் வீரர்கள் டெல்லியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.

20 ஓவர்களில், 9 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி, 115 ரன்களை எடுத்தது. சிறப்பாக பந்துவீசிய டெல்லி அணியின், இஷாந்த் ஷர்மா, அமித் மிஷ்ரா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து, 116 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் ப்ரித்வி ஷா 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களம் இறங்கிய வீரர்கள் ராஜஸ்தானின் பந்துவீச்சில் தடுமாறிய நிலையில், டெல்லி வீரர் ரிஷாப் பண்ட் சிறப்பாக விளையாடி ஆட்டமிழக்காமல் 53 ரன்கள் குவித்தார். 16.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த டெல்லி 121 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 18 புள்ளிகளை பெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி புள்ளி பட்டியலில் 2 வது இடத்திற்கு முன்னேறியது.

Exit mobile version