காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் விடுமுறையை கழிப்பதற்காக மும்பை சென்றுள்ளதாக கர்நாடக அமைச்சர் ஜமீர் அகமது கான் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் குமாரசாமிக்கு அளித்து வந்த ஆதரவை நாகேஷ் மற்றும் சங்கர் ஆகிய சுயேச்சை எம்.எல்.ஏக்கள் திரும்ப பெற்றுள்ளனர். இதனிடையே கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் 16 காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கட்சி மாறயிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு கவிழக்கூடும் என தகவல்கள் வெளியாகின. இதனிடையே, அறுதிப்பெரும்பான்மைக்கு தேவையான 113 எம்.எல்.ஏக்களை விட கூடுதலாக 2 எம்.எல்.ஏக்கள் இருப்பதால், ஆட்சியை ஒன்றும் செய்யமுடியாது என முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் விடுமுறையை கழிப்பதற்காக தான் மும்பை சென்றுள்ளதாகவும், அவர்கள் இன்றைக்குள் பெங்களூரு திரும்பி வந்துவிடுவார்கள் எனவும் அமைச்சர் ஜமீர் அகமது கான் தெரிவித்துள்ளார்.